Uncategorized சினிமா செய்திகள்

கதையல்ல பெயர் மட்டும் – லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பட விவரம்

நல்ல கதை,அதற்குத் தக்க நடிகர்கள்,சரியான திட்டமிடல் ஆகியனவற்றோடு திரைப்படங்கள் எடுத்தால் அவை திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும் இலாபம் தரக்கூடியவை என்று சொல்வார்கள்.அதைச் செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் தயாள் பத்மநாபன்.

அவர் இயக்கிய கொன்றால் பாவம்,மாருதி நகர் காவல் நிலையம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இப்படத்தில் வெற்றி,சுபவீ,கவிதாபாரதி,ரங்கராஜ் பாண்டே,பிரிகிடா,லிஸ்ஸி ஆன்டனி,சரவணன்,லொள்ளு சபா மாறன்,இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.திரைக்கதை,வசனத்தை கவிதாபாரதியும் தயாள்பத்மநாபனும் இணைந்து எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்பது தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வழக்கு.சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்கு.சி.என்.லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944 இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொதுமருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன்விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.அப்போது,தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர்,என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் சு.மு.சிறீராமுலு நாயுடு ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.இவ்வழக்கில் இயக்குநர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது உச்சத்தில் இருந்த இரண்டு நடிகர்கள் தண்டிக்கப்பட்டதால் இவ்வழக்கு பெரும் பரபரப்பான வழக்காக இருந்தது.

இதுதான் இந்தப்படத்தின் கதையா என்றால்? இல்லையாம்.

இந்தப்பெயரை மட்டும் வைத்துக் கொண்டு தற்போது நாட்டில் பெரிய சிக்கலாக இருக்கும் ஒரு சிக்கலை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

சட்டம்,நீதி ஆகியன குற்றவாளிகளைத் திருத்துவதற்காகச் செயல்படவேண்டும் தண்டிப்பதற்காக அல்ல என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக இது இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அந்தக் கருத்தை விரல்நீட்டிப் பேசும் வசனங்களில் சொல்லாமல் பார்த்து உணரும் வகையில் சொல்ல முயன்றிருக்கிறோம் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்காகத் திட்டமிட்டதைவிட அதிகச் செலவு ஆகிவிட்டாலும் படத்தின் தரத்தைக் கருத்தில் கொண்டு அதை மனமுவந்து செய்திருக்கிறோம் என்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.

ஜூலை பத்தாம்தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வழக்கு வெல்லட்டும்.

Related Posts