லோக்கல் டைம்ஸ் – இணையத் தொடர் விமர்சனம்
உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும் அச்சாகி வரும்போது அதைப் பார்க்கும்போது அவர்கள் கண்களிலும் முகத்திலும் தெரியும் ஒளியில் அதை நாம் உணரமுடியும்.
அப்படியான ஓர் உணர்ச்சிப் பிழம்பான கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் லோக்கல் டைம்ஸ்.
மிகவும் புகழ்பெற்ற வார இதழான ‘நம்ம செய்தி’, தற்போது அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறது.வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து ஆகிய நான்கு நண்பர்கள் இந்த பத்திரிகையை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.
கையில் பணமே இல்லையென்றாலும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் நேரத்தில் ஒரு வலுவான எதிரியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.அவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறது தொடரின் திரைக்கதை.
ரிஷிகாந்த்,அப்துல் லீ, மெளரிஷ் தாஸ்,அத்விதா ஆறுமுகம் ஆகியோர் உணர்வுப் பூர்வமான பத்திரிகையாளர்களாகவும் அதேநேரம் தோள் கொடுக்கும் தோழர்களாகவும் வேடமேற்று அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள.
பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் ஆகியோருக்கும் அவர்களுடைய பிம்பத்தைக்கேற்ற வேடங்கள்.தங்கள் அனுபவ நடிப்பால் அதற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
பிரவீன் முத்துரங்கன் உருவாக்கியுள்ள இதை, அபிநவ் கஸ்தூரா,சத்விக் கடே,தாமஸ் மேனுவல் மற்றும் விஸ்வக்சென் ஆகியோர் மெருகேற்றியிருக்கிறார்கள்.
தாத்தாவின் பத்திரிகையைக் காக்கப் பாசத்துடன் போராடும் பேரன்,வலுவான நட்பு, பலமான எதிரி ஆகிய உணர்வுகளோடு நால்வரின் அவசரக் குடுக்கைத் தனமான செயல்கள் மூலம் நல்ல நகைச்சுவை ஆகியனவற்றைக் கலந்து சுவையான தொடரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸ்.
ஒரு உள்ளூர் பத்திரிகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு இதழியல் நேசம், நட்பு, விடாமுயற்சி ஆகிய உலகப்பொது உணர்வுகளைக் கலந்து தொடரை உருவாக்கியிருப்பது புத்திசாலித்தனம்.
– கதிர்
குறிப்பு – ஏழு பாகங்களைக் கொண்ட இந்தத் தொடர் மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது.











