குருப் – திரைப்பட விமர்சனம்
கேரளாவில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் குருப்.
தப்பைத் தைரியமாகச் செய்யும் வேடம் துல்கர் சல்மானுக்கு. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவருடைய திமிர் நடையும் அலட்சியப் பேச்சும் வேடத்துக்குப் பெரும்பலம்.
எண்பதுகளில் நடந்த கதை என்பதால் அக்காலத்துக்கேற்ப விதவிதமான உடைகள் மற்றும் தோற்றங்கள் என படம் நெடுக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் துல்கர் சல்மான்.
அவருக்கடுத்து விசாரணை அதிகாரியாக வரும் இந்திரஜித் அருமையாகப் பொருந்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஷோபிதாதுலிபலா நாயகி. அவர் நாயகன் துல்கரின் மனைவியாக நடித்திருப்பதால் நாயகி. அவ்வளவுதான்.
ஷைன்டாம்சாக்கோ, ஷன்னிவெய்ன், டொவினோதாமஸ் உட்பட பலரோடு பரத்தும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
நிமிஷ்ரவி ஒளிப்பதிவு கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
சுஷின் ஷ்யாமின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு கலந்து ஒலிக்கின்றன. பின்னணி இசை அளவு.
கலைஇயக்கம் செய்திருக்கும் பங்லனுக்கு வேலை அதிகம். எண்பதுகளின் மும்பை, கேரளா, தொடர்வண்டி மற்றும் விமான நிலையங்களை காட்சிப்படுத்த கடுமையாக உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் விவேக்ஹர்சனும் திரைக்கதை எழுதிய டேனியல் சயூஜ் நாயரும் கே.எஸ்.அரவிந்தும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கலாம். அவர்கள் கோட்டை விட்டதால் பல இடங்களில் கொட்டாவி வருகிறது.
இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரனுக்கு யாரை எவ்வளவு பயன்படுத்த வேண்டுமெனத் தெரிந்திருக்கிறது.
இனி என்னை யார் சந்திப்பதாக இருந்தாலும் அதை நான்தான் முடிவு செய்வேன் என்று அதிரடியாகப் பேசுவதும், தன்னைத் தேடும் காவல்துறையையே பின் தொடர்ந்து தன் இலக்கை அடைவதும் என துல்கர்சல்மானின் வீரதீரச் செயல்களுக்காகவும் விதவிதமான தோற்றங்களுக்காகவும் பார்க்கலாம்.











