சினிமா செய்திகள்

ஒரு கதாநாயகனால் நிராகரிக்கப்பட்ட கதையை ரஜினிக்கு சொன்ன சுந்தர்.சி – புதிய தகவல்

ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

அந்த அறிவிப்போடு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் காணொலியும் வெளியிடப்பட்டன.

அருணாச்சலம் படத்தை அடுத்து சுந்தர்.சியும் ரஜினிகாந்தும் இணைவதால் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக நவம்பர் 13 அன்று சுந்தர்.சி அறிவித்தார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் ‘தலைவர் 173’ படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி சாரை இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அதில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்துக்கு அவை உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை இந்தச் செய்தி ஏமாற்றியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது ஏன்? என்பது குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.

இந்தச் சூழலில் நவம்பர் 15 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்துக் கூறியதாவது….

நான் முதலீட்டாளர். என்னுடைய நட்சத்திரத்துக்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதைத்தான் செய்திருக்கிறோம். அவருக்கு (ரஜினி) பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டிருப்போம். புதியவர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கதை பிடிக்கவேண்டும் அவ்வளவுதான். நானும் ரஜினியும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறினார்.

இதன்மூலம் சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்பதால் இந்த விலகல் நேர்ந்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

santa - senba - vjs -sundarc

santa – senba – vjs -sundarc

இந்நிலையில்,சுந்தர்.சி சொன்ன கதை என்ன? என்பது குறித்து உலவும் தகவல்….

இரண்டாண்டுகளுக்கு முன்பாக சுந்தர்.சி இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தில் சந்தானம் இணைகிறார் என்றும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அறிவிப்பு வெளியானது.அது அரண்மனை வரிசையில் சேருகிற படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.அதன்பின் அந்தப்படம் நடக்கவில்லை.அப்போது விஜய்சேதுபதி அந்தக் கதை பிடிக்கவில்லை என்று நிராகரித்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

இப்போது,ரஜினிக்கும் அந்தக் கதையைத்தான் சுந்தர்.சி சொன்னாராம்.ரஜினியும், இந்தக் கதையில் முழுதிருப்தி இல்லையென்றும் இதில் பல மாற்றங்களைச் செய்யவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.அவர் சொன்னதற்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் சுந்தர்.சி.மாற்றம் செய்யப்பட்ட கதையும் ரஜினிக்கு திருப்தியில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இந்தப்பிரிவு நடந்துவிட்டது என்கிறார்கள்.

Related Posts