சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி – புதிய பட விவரம்

ஜெயம்ரவி இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறாராம்.

ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவிருக்கிறார்.இவருடைய தயாரிப்பில் இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியானது சைரன் படம்.அப்பட வெளியீட்டின்போது சுமார் மூன்றரை கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாம்.அப்போது அதற்குப் பொறுப்பேற்று ஜெயம்ரவி கையெழுத்திட்டதால் அப்படம் சுமுகமாக வெளியானது.

அதனால் அடுத்த படமும் அந்த நிறுவனத்திலேயே நடிப்பது என்று ஜெயம்ரவி திட்டமிட்டிருந்தாராம்.

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் அடங்கமறு. அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் மீண்டும் ஜெயம்ரவி நடிக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை சுஜாதா விஜயகுமாரே தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது.இப்போது கார்த்திக் தங்கவேலை காத்திருக்கச் சொல்லிவிட்டு பாண்டிராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இயக்குநர் பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு விஷாலை கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை.அதற்குக் காரணம் விஷால் சம்பள விசயத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்கிறார்கள்.

அதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த பாண்டிராஜுக்கு ஜெயம்ரவி கை கொடுத்திருக்கிறார்.

பாண்டிராஜ் சொன்ன கதை ஜெயம்ரவிக்குப் பிடித்ததால் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரிடம் சொல்லி பாண்டிராஜை ஒப்பந்தம் செய்ய வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஜெயம்ரவி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரதர்,ஜீனி,காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டன.கடைசிநேர மாற்றங்களின் படி இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கலாம் என்கிற நிலை.

அதனால் உடனடியாக பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜூன் மாத மத்தியில் அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts