யுவன் கொடுத்த ஒரு கோடி – சிந்துபாத் கடைசி நேர நிகழ்வுகள்
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்திருக்கும் படம் சிந்துபாத்.
இந்தப்படத்தில் நாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா.
இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜனுக்கும் பாகுபலி படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா நிறுவனத்துக்குமான கணக்கு வழக்கால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
எல்லாச் சிக்கல்களும் முடிந்து ஜூன் 28 அன்று படம் வெளியாகும் என்று சொல்லபட்டது.ஆனால் அதிலும் குழப்பம் நேர்ந்திருக்கிறது. 28 ஆம் தேதியும் படம் வெளியாவதில் சிக்கல் என்கிற நிலை இருந்தது.
இந்நிலையில், ஜூன் 25 ஆம் தேதியன்று திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு படம் ஜூன் 27 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பேச்சுவார்த்தையின்போது இச்சிக்கலைத் தீர்க்க தன் பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தாராம் யுவன்ஷங்கர்ராஜா.
இதனால் கடைசிநேரப் பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.
படம் வெளியாக அவர் செய்த இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.











