ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் பயம் – இயக்குநர் சுனில்தேவ் பேட்டி
அறிமுக நாயகன் சித்தார்த் எஸ்.பி, அறிமுக நாயகி சைத்தன்யா ஆகியோருடன் அனந்த் நாக்,சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அதோமுகம்.இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு அருண் விஜயகுமார்,படத்தொகுப்பு விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி.
இதுவரை திரைப்பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தை டிரிம்வாரியர் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுனில்தேவ்.
பட வெளியீட்டுக்கு முன் அவருடன் ஓர் உரையாடல்….
1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்..?
நான் ஒரு தனியார் திரைப்படக்கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தேன். அதன்பின் ஐந்து குறும்படங்களை இயக்கினேன்.அதோடு ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினேன். அதன்பின் இந்தப்பட வாய்ப்பு வந்தது.
2.இந்தப்பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?
இப்படத்தின் நாயகன் சித்தார்த்தும் நானும் பல ஆண்டுகளாக நண்பர்கள். நான் படம் இயக்குவதற்காக கதை எழுதிக் காத்திருந்த நேரத்தில் அவரே முன்வந்து இந்தப்படத்தை நாமே தயாரிப்போம் என்றார்.அதோடு என் கதையில் வருகிற தேயிலைத்தோட்டம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்றார்.அது என்னுடைய திரைக்கதை முழுமையடைய உதவியது.படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம்.
3. படப்பிடிப்பு அனுபவங்கள்..?
ஏற்கெனவே குறும்படங்கள் எடுத்திருந்ததால் நான் மிக இயல்பாக படப்பிடிப்பை நடத்தினேன்.சித்தார்த் சைதன்யா உள்ளிட்ட நடிகர்களும் நன்றாக ஒத்துழைத்தனர். அதனால் சுமார் ஐம்பது நாட்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்.

Athomugam – S.P.Siddarth – Chaitana pradap
4. படப்பிடிப்பில் சிரமங்களே இல்லையா?
படப்பிடிப்பில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் தயாரிப்பு நிர்வாகத்தை சித்தார்த்துடன் சேர்ந்து நானும் பார்த்துக்கொண்டேன். அதுதான் கொஞ்சம் சிரமம்.ஆனாலும் நல்ல அனுபவம்.
5.அதோமுகம் என்கிற பெயர் உடனடி வியாபாரத்திற்கான பெயராக இல்லையே? இதை எப்படி வைத்தீர்கள்?
படத்தின் கதைக்குப் பொருத்தமாக பல பெயர்களைப் பரிசீலித்தோம்.கதையில், மறைத்து வைத்திருக்கும் முகம் எனும் பொருளில் உள்ள ஆங்கிலச் சொல்லான ஹிடன்ஃபேஸ் எனும் பெயர் வைக்கலாம் என்று கூட யோசித்தோம்.அதையே தமிழில் வைப்போம் என்று எண்ணியபோது இந்தப்பெயர் கிடைத்தது. அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்றுதான் பொருள்.வைக்கும்போது இது கமர்சியலாக இருக்குமா? என்கிற எண்ணம் எங்களுக்கும் வந்தது. அப்போதே இது குறித்த தேடல்களில் மக்கள் ஈடுபடுவார்கள் என்று நினைத்தோம்.இப்போது அப்படியே நடக்கிறது. அதனால் எங்களுக்கும் மனநிறைவு.
6.இரண்டு மொழிகளில் உருவாக்கியது பற்றி..?
இந்தக்கதை எந்த மொழிக்கும் பொருந்தக்கூடியது. எனவே, தமிழ் மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எடுத்தோம்.இங்கு அருண்பாண்டியன் சார் நடித்த வேடத்தில் மலையாளத்தில் மனோஜ் கே.ஜெயன் நடித்திருக்கிறார். மற்ற எல்லாம் ஒன்றேதான்.
6.படம் உருவான பின்பு உங்களுக்குக் கிடைக்கும் விமர்சனங்கள்..?
இன்னும் மக்களிடம் போகவில்லை.இப்போது பார்த்த அனைவருமே படம் மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டிப் பேசுகிறார்கள். படத்தை வெளியிடும் டிரீம்வாரியர் நிறுவனத்தினரும் பாராட்டினர்.அதனால் ஒரு பக்கம் சந்தோசம், இன்னொரு பக்கம் மக்களின் கருத்துக்காகப் பயத்துடன் காத்திருக்கிறேன்.
– அன்பன்











