செய்திக் குறிப்புகள்

ஏ சான்றிதழ் எதற்காக? – பிரசாந்த் ராமர் விளக்கம்

சித்தார்த் நடித்த, எனக்குள் ஒருவன் படத்தை இயக்கியவர் பிரசாத் ராமர். அந்தப்படத்துக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’.

இப்படத்தில் நாயகனாக புதுமுகநடிகர் செந்தூர் பாண்டியனும், நாயகியாக ப்ரீத்தி கரன் என்பவரும் இவர்களோடு சுரேஷ் மதியழகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை பூர்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படம் எதிர்வரும் மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் பிரதீப் குமார் கூறியதாவது….

எனக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.பல ஆண்டுகளாக நானும் இயக்குநர் பிரசாத்ராமரும் நண்பர்கள்.அவர், இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, புதிதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஜாலியான கதையாகவும் தெரிந்தது.அதனால் நான் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். நான் மட்டும் தயாரிக்கவில்லை. எனக்காக என் குடும்பமே ஒன்று சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.இப்போது படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நிச்சயம் இரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

படம் பற்றி இயக்குநர் பிரசாத் ராமர் கூறியதாவது….

இந்தச் சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது? சமூகத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பனவற்றைச் சொல்லும் வகையில் இந்தப் படத்தின் கதை இருக்கிறது.இதன் திரைக்கதை சாலைப்பயண பாணியில் இருக்கும்.

இரண்டு இளைஞர்கள்,மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது.

இந்த இரு தரப்பு எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது? அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றித் தான் படம் பேசுகிறது.

இந்தப் படத்தை வழக்கமான பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கைப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்திருக்கிறோம்.அதற்காகத் தான் ஈஸ்தட்டிக்ஸ் கலர் போன்ற விசயங்களைத் தவிர்த்திருக்கிறோம். அதேபோல்,மதுரை உள்ளிட்ட பகுதிகளைக் காட்டும் போது வழக்கமாகக் காட்டப்படும் இடங்களைக் காட்டாமல், இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரைப் பகுதிகளில் காட்சிகளைப் படமாக்கினோம்.அதற்குக் காரணம், அப்பகுதிகளில் இருப்பவர்கள் படத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்காகத் தான். தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் இப்படித்தான் கையாண்டிருக்கிறோம்.

இப்படத்துக்கு, தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.கதைக்காக படத்தில் முத்தக்காட்சிகள் வைத்திருக்கிறோம்.நாங்கள் தொட்டிருக்கும் சம்பவங்களுக்காக ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.அதே சமயம், அக்காட்சிகளை எடுக்கும் போது சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு விரிவாகப் புரிய வைத்துத் தான் எடுத்திருக்கிறோம்.அந்தக் காட்சிகள் எந்தவிதத்திலும் நெருடலாக இருக்காது.படத்தைப் பார்க்கும் போது அதை நீங்களும் உணர்வீர்கள்.

இந்தப் படத்தில் எந்தக் கருத்தும் சொல்லவில்லை, இது சரி, அது தவறு என்று அறிவுரையும் வழங்கவில்லை.இதுதான் தீர்வென்றும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம்.அவற்றைத் திரையில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்குப் பல கேள்விகள் எழும்.அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts