சினிமா செய்திகள்

திரைத்துறையிலிருந்து விலகுகிறார் ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் அச்சங்கத்தின் பொதுக்குழு பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்தது.

இப்போது அச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருக்கிறார்.

அவர் தலைமையிலான இப்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற நிலை பொதுக்குழுவில் இருந்திருக்கிறது.

ஏனெனில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் அப்போதைய நிர்வாகத்துக்கு எதிரான குரல்கள் ஒலிக்கும்.ஆனால் இந்தப் பொதுக்குழுவில் இப்போதைய நிர்வாகம் குறித்து எந்த அதிருப்தியும் இல்லை,ஒரு எதிர்ப்புக்குரலும் இல்லை.

இதனால், இப்போது நிர்வாகிகள் அப்படியே நீடிப்பார்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், ஆர்.கே.செல்வமணியின் அறிவிப்பு அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர், நான் வருகிற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டாராம்.

இந்தச் சங்கத்தில் தலைவராக இருப்பதால்தான் அவர் ஃபெப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஃபெப்சியில் தலைவராக இருப்பவர் அதன் அங்கமான 24 சங்கங்களில் ஏதாவதொன்றில் நிர்வாகியாக இருக்கவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் இயக்குநர்கள் சங்கத்தலைவர், தொழிலாளர்கள் சங்கத்துக்கும் தலைவராக இருக்கிறார்.

இப்போது அவர் இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்புக்கு வரவில்லையென்றால் ஃபெப்சியில் தலைவராக நீடிப்பதும் நடக்காது.

ஃபெப்சியில் இன்னும் ஓராண்டுக்கு மேல் அவருடைய பதவிக்காலம் இருக்கிறதாம். அது என்னவாகும்?

அதற்கு, இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறது. மார்ச் 16 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஃபெப்சி நிர்வாகத்துக்குள் வரமாட்டார்கள். ஆர்.கே.செல்வமணியின் பதவிக்காலம் இருக்கும்வரை அவர் நீடிக்கட்டும் என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றி ஃபெப்சி நிர்வாகத்துக்கு அனுப்பிவிட்டார்களாம்.

அதனால் இப்போது இருக்கும் பதவிக்காலம் வரை அவருக்குச் சிக்கலில்லை.

அதன்பின்?

அதன்பின் இயல்பாகவே அவர் போட்டியிடவியலாது.

இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியனவற்றில் அவருடைய செயல்பாடுகளில் குறையில்லை,அடுத்தும் அவர் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்படலாம் அல்லது போட்டியிட்டாலும் வெல்வார் எனும் நிலையில், தாமாக முன்வந்து விலகலை அறிவித்திருக்கிறார்.

அவர் திரைப்படம் இயக்குவதை விட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.சங்க நிர்வாகங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். இப்போது அதிலிருந்தும் விலகுகிறார்.

அவருடைய மனைவி ரோஜா,ஆந்திர அரசியலில் தீவிரமாக இருக்கிறார்.அதனால், திரைப்படத்துறை செயல்பாடுகளிலிலிருந்து முற்றிலும் விலகி, அவருக்குத் துணையாக இவரும் அங்கே செல்வார் என்று சொல்கிறார்கள்.

Related Posts