சினிமா செய்திகள்

உயர்ந்தது தனுஷ் சம்பளம் – விவரம்

கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் 51 என்று சொல்லப்படும் அந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சனவரி 18 அன்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், இந்தப்படத்துக்கு அடுத்து தனுஷ் நடிக்கும் படமும் உறுதியாகியிருக்கிறது.

சேகர்கம்முலா இயக்கும் படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து அனைத்தும் சுமுகமாக நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குக் காரணம் தனுஷ் கேட்ட சம்பளம்தான் என்கிறார்கள்.

இதுவரை அதிகபட்சம் சுமார் இருபத்தைந்து கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் தனுஷ். இந்தப்படத்துக்கும் அவ்வளவுதான் இருக்கும் அல்லது ஒரு சில கோடிகள் அதிகம் கேட்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் இந்தப்படத்துக்குச் சம்பளமாக சுமார் நாற்பது கோடி வேண்டும் என்று தனுஷ் கேட்டாராம்.

இதனால் தயாரிப்புத் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.

எச்.வினோத் தனுஷ் கூட்டணி என்பதால் இப்படத்தின் வியாபாரம் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும் என்றாலும் தனுஷ் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து அதன்பின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர் நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் ஆகியனவற்றோடு படமெடுக்கும் செலவு ஆகியனவற்றைக் கணக்குப் போட்டால் பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பது தயாரிப்பாளரின் கருத்து.

இதனால் பலமுறை இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து இறுதியாக முடிவு எட்டப்பட்டுவிட்டதாம்.அதன்படி இந்தப்படத்தில் தனுஷுக்கு சுமார் முப்பத்தைந்து கோடி சம்பளம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதனால், சேகர்கம்முலா இயக்கும் படம் நிறைவடைந்த உடனே எச்.வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

இப்போதைக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவது என்று திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். தனுஷ் 51 படப்பிடிப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதையொட்டி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதிலும் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.

Related Posts