சினிமா செய்திகள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – இரண்டு அணிகள் இணைந்தன

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 21 ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள ஏப்ரல் 17 அன்று வெளீயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தொடர்பாக தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 வரை வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். (Black & white address book Rs. 500/-, colour address book Rs. 2000/-)

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற ஜூன் 21 ஆம் தேதி (21.06.2020) நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை உறுப்பினர்கள் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் அட்டவணை

1. 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை வேட்புமனுத் தாக்கலுகான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்).

2. 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.

3. 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களை தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது)

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும்.

5. 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற இயலாது.

6. 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு….

தலைவர் பதவிக்கு – ரூ.1,00,000/- (ரூ.ஒரு லட்சம்)

மற்ற நிர்வாகிகள் பதவிக்கு – ரூ.50,000/- (ரூ.ஐம்பதாயிரம்)

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூ.10,000/- (ரூ.பத்தாயிரம்)”.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகிய இருவரும் தெரிவித்திருந்தனர்.

இந்தத் தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்படும் சூழல் இருந்தது.

தயாரிப்பாளர் டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி தலைமையில் இன்னொரு அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதன்படி,

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ என்று டி.சிவாவின் அணிக்குப் பெயரிட்டுள்ளனர். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ் குமார், நந்தகோபால், மனோபாலா, பாபு கணேஷ், சுப்பு பஞ்சு, முருகராஜ், வினோத் குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்கிற முரளி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் 126 படங்களை இயக்கிய மறைந்த ராம நாராயணனின் மகன் ஆவார். இதே அணி சார்பில் செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்.ராஜேஷ் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர்.

ஆகிய இரு அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அறிவிக்கப்படாத இன்னொரு அணியில் சத்யஜோதி தியாகராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடுவதால் வெடித்துள்ள சர்ச்சையை முன்வைத்து 30 தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை நேற்று (ஏப்ரல் 26) வெளீயானது.

அதில்….

அனைவருக்கும் வணக்கம்!
திரைப்படத் தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.

அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை.

அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குநர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழித் திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து
வருகிறார்கள்.

இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும்.

இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்கக் கோர வேண்டும்.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்துத் தரப்பினரும் (தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்தச் சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

ஒற்றுமையை எதிர்நோக்கி,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்

இயக்குநர் பாரதிராஜா, டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன்,கே.ராஜன்,
கே.ஈ.ஞானவேல் ராஜா,எச்.முரளி,கே.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன்,எஸ்.எஸ்.துரைராஜ், ஃபெப்சி சிவா, ஒய்நாட் எஸ்.சஷிகாந்த்,கோ.தனஞ்செயன்,எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சி.வி.குமார், சுதன் சுந்தரம் (பேசன் ஸ்டுடியோஸ்), சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா,எஸ்.நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ்,ஆர்.கே.சுரேஷ், வினோத் குமார்,பி.எஸ்.ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன்,பி.ரங்கநாதன்,எம்.எஸ்.முருகராஜ், பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் மேலும் பல தயாரிப்பாளர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்களில் பாதிப்பேர் டி.சிவா அணியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள். மீதிப்பேர் டி.ஜி.தியாகராஜன் அணியில் போட்டியிடவிருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இக்கூட்டறிக்கை மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் மூன்று அணிகளுக்குப் பதிலாக இரண்டு அணிகள் மட்டுமே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts