சினிமா செய்திகள்

மாவீரனோடு மோதும் புதியபடம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான விளம்பர நிகழ்வு பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் படம் வெளியாகிறது, அதை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்றால் அந்தநாளில் இன்னொரு படத்தை வெளியிட யாரும் முன்வரமாட்டார்கள்.அதுவும் சின்னப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வரவே மாட்டார்கள்.

ஆனால், மாவீரன் வெளியாகவிருக்கும் ஜூலை 14 ஆம் தேதியன்றே இன்னொரு படமும் வெளியாகவிருக்கிறது.

அந்தப்படம் பாபா பிளாக் ஷிப்.

நடிகராக அறியப்பட்ட ராஜ்மோகன் இயக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.

அயாஸ் நரேந்திர பிரசாத் என்பவர் நாயகனாகவும் அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்துள்ள இந்தப்படத்தில்,
‘விருமாண்டி’ அபிராமி, விக்னேஷ்காந்த்,சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி,போஸ் வெங்கட்,வினோதினி வைத்தியநாதன்,சேட்டை ஷெரீப்,மதுரை முத்து,கேபிஒய் பழனி,சுந்தர்,நக்கலைட்ஸ் பிரசன்னா,
நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரோமியோ பிக்சர்ஸ் மூலம் ராகுல் தயாரித்துள்ளார்.

இந்தப்படம்தான் மாவீரனோடு மோதத் துணிந்திருக்கிறது.

இவர்கள் இந்த முடிவெடுக்க இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, ஒரு பெரியபடம் வரும்போது கூடவே இன்னொரு சின்னப்படம் வருவதற்கான இடம் இருக்கிறது.

இன்னொன்று, இந்தப்படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினரே வெளியிடவிருக்கிறார்கள் என்பது.

படத்தில் பெயர் போட்டு வெளியிடுகிறார்களா? பெயர் போடாமல் வெளியிடுகிறார்களா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்தப்படத்துக்கு மல்டிப்ளெக்ஸ் எனப்படும் பல்திரைக்கூடங்களில் மட்டும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்களாம். பெருநகரங்களில் மட்டும் வெளியாகும் படமாக இது இருக்கும் என்பதால் மாவீரனோடு போட்டி என்ற சொல்லுக்கே இடமில்லை என்பது அப்படக்குழுவினரின் கருத்து.

Related Posts