ரெஜினா – திரைப்பட விமர்சனம்
சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம் சுனைனாவுக்கு. அதை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனின் இழப்பை எண்ணிக் கலங்கும்போது கலங்க வைக்கிறார். பழிவாங்கும் காட்சிகளில் ஆக்ரோசத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். அவரே குரலும் கொடுத்திருக்கிறார். அது சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் பலவீனமாகவும் இருக்கிறது.
சுனைனாவின் அப்பாவாக நடித்திருக்கும் பவாசெல்லதுரை, கணவராக நடித்திருக்கும் ஆனந்த்நாக் ஆகியோர் மட்டுமின்றி விவேக்பிரசன்னா,தீனா, கஜராஜ் ஆகியோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் அதுவும் நாயகியை மையப்படுத்திய கதை என்பதற்கேற்ப ஒளியமைப்பு செய்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பவி.கே.பவன்.
சதீஷ்நாயரின் இசையில் சூறாவளி போல என்கிற பாடல் கவனம் ஈர்க்கிறது. மற்ற பாடல்கள் கடந்து போகின்றன. பின்னணி இசை அளவு.
டொமின் டி செல்வா இயக்கியுள்ளார்.
அப்பா மாவோயிஸ்ட், அவர் கொலை செய்யப்படுகிறார் என்று படம் தொடங்குவதால் ஆழமான கருத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக நல்ல அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும் என்று நம்பினால் ஏமாற்றம்.
– வேலன்










