யானை வெளியீடு தள்ளிப்போனது – அருண்விஜய் அதிர்ச்சி
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கேகேஆர் சினிமாஸ் எனும் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால், படத்தின் இயக்குநர் ஹரி, நாயகன் அருண்விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ்நாடு முழுக்கச் சென்று திரையரங்குகளில் இரசிகர்களைச் சந்தித்து யானை படத்துக்கு விளம்பரம் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.
இந்தப்படம் நிச்சய வெற்றி பெறும் என்கிற பெரிய் நம்பிக்கையுடன் நாயகன் அருண்விஜய் உற்சாகமாகப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
ஆனால், படவெளீயீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகாது என்கிறார்கள்.
சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை அதனால் படவெளீயீட்டைத் தள்ளிவைக்கலாம் என படத்தை வாங்கியிருக்கும் கேகேஆர் சினிமாஸ் நிறுவனம் சொன்னதாகச் சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம், இப்படத்தின் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதால் தயாரிப்புநிறுவனம் படத்தை வெளியிடவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே படம் வெளியாகவில்லை என்கிறார்கள்.
எனவே, அறிவித்தபடி ஜூன் 17 ஆம் தேதி படத்தை வெளியிடுங்கள் என்று இயக்குநர் ஹரி மற்றும் நாயகன் அருண்விஜய் ஆகியோர் வற்புறுத்தியும் அதை ஏற்காமல் படவெளீயீட்டைத் தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.
இதனால் அருண்விஜய் மற்றும் ஹரி ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.











