கதைத் திருட்டு சிக்கலில் சிகாவின் பராசக்தி – பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14,2024 அன்று மாலை வெளியானது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தத் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் கதை 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,இந்தக் கதை என்னுடையது என்று ஒருவர் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் பெயர் வருண் ராஜேந்திரன்.ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று நீதிமன்றம் சென்று நிலைநிறுத்தியவர் தான் இந்த வருண் ராஜேந்திரன்.
1965 ஆம் ஆடு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக ஒரு திரைக்கதை எழுதி அதை எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு செய்து வைத்திருந்தாராம்.2010 ஆம் ஆண்டே அவர் பதிவு செய்திருக்கிறார்.
இப்போது,சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படம் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது என்று செய்திகள் வெளியானவுடன், எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்தாராம்.
அவர்களோ,இது நாடறிய நடந்த மாபெரும் போராட்டம்.அது குறித்த செய்திகள் எல்லா ஏடுகளிலும் வந்திருக்கின்றன.அவற்றை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் அதிலிருந்து கதை எடுத்து எழுதலாம் என்று சொல்லிவிட்டார்களாம்.
அதற்கு, 1965 ஆம் ஆண்டு போராட்டம் நடந்து அறுபது ஆண்டுகள் ஆகின்றன.இவ்வளவு ஆண்டுகளில் அந்தப் போராட்டம் பற்றி ஏதாவது படமோ அல்லது ஏதாவதொரு படத்தில் காட்சிகளோ இடம்பெற்றிருந்தனவா? இல்லையே? இப்போது என்னுடைய முழுமையான திரைக்கதையைத் திருடித்தான் இந்தப்படம் எடுக்கிறார்கள் என்று வாதிட்டிருக்கிறார்.
ஆனால்,எழுத்தாளர்கள் சங்கம் அதை ஏற்கவில்லையாம்.இதனால், நான் இப்படி ஒரு புகார் கொடுத்தேன் அதை நீங்கள் வாங்கிக் கொண்டதாக ஒரு கடிதம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அதையும் அவர்கள் தர மறுத்துவிட்டார்களாம்.
இதனால், அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதனால் அடுத்து வரும் நாட்களில் இச்சிக்கல் பெரிதாகும் என்று தெரிகிறது.
இப்போது மிகக் கமுக்கமாக இந்தச் சிக்கல் திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.
பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம்.அப்படத்தின் செலவு, இதுவரை அவர் நடித்த படங்களுக்கு ஆன செலவைவிட பன்மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
பெயர் பெற்ற இயக்குநர்,முன்னணி கதாநாயகன், பெரும் பொருள் செலவு செய்யத் தயாராக இருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகியன இருந்தும் அதற்கான கதை அவர்களிடம் இல்லை. வேறொருவரிடம் இருந்து அவருக்குத் தெரியாமல் எடுக்க வேண்டியதாகிவிட்டது.இது தமிழ்த் திரையுலகில் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது.
அடுத்தவர் கற்பனையைத் திருடி, பணம் பொருள் புகழ் ஈட்டும் இழிநிலை மாறவேண்டும் என்பது நிஜமான படைப்பாளிகளீன் எதிர்பார்ப்பாக இருக்கிறது.