கோபம் மறந்து விக்ரம் செய்த உதவி – தயாரிப்பாளர் நன்றிக் கண்ணீர்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் பல ஆணடுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வி.ஏ.துரை. பின்னாளில் இயக்குநராகாமல் தயாரிப்பாளர் ஆனார்.
சத்யராஜை வைத்து என்னம்மாகண்ணு, லூட்டி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பின்பு பாலா இயக்கத்தில் விக்ரம்,சூர்யா ஆகியோர் நடித்த பிதாமகன் படத்தைத் தயாரித்தார்.
பிதாமகன் படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது.
அந்தப்படம் வெளியானபோது விஜய்யின் திருமலை படமும் வெளியாகியிருந்தது.
இரண்டு படங்களும் போட்டி போட்டு ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் படத்தின் விளம்பரங்களைச் செய்தித்தாள்களுக்குக் கொடுப்பதை நிறுத்தினார் வி.ஏ.துரை.
இதனால் நாயகன் விக்ரமுக்குக் கடுங்கோபம். ஏற்கெனவே பேசிய சம்பளத்தில் சுமார் முப்பது இலட்சத்தைத் தராமல் விட்ட தயாரிப்பாளர், படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் விளம்பரத்தையும் நிறுத்திவிட்டாரே என்று கோபப்பட்டார்.
அந்தநேரத்தில் சம்பளபாக்கிக்காகப் பெரும் பஞ்சாயத்து நடந்தது. ஆனால் கடைசிவரை அந்தச் சம்பளம் தரப்படவில்லை.
அந்தச் சிக்கல்கள் நடந்து முடிந்து இருபதாண்டுகள் கடந்துவிட்டன.
இப்போது, அதே தயாரிப்பாளர் வி.ஏ.துரை, நீரிழிவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மருத்துவச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல் தவித்த அவருக்குத் திரைத்துறையினர் பலர் உதவினர்.ஆனாலும் சிகிச்சை காலத்தில் ஒரு கால் எடுக்கப்பட்டது.இந்நிலையில், அவருக்கு செயற்கைக்கால் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கான தொகை இல்லை. மருத்துவ சிகிச்சைக்காகவே பலர் உதவியிருப்பதால் மீண்டும் அவர்களிடம் பணம் கேட்கவியலாது என்கிற சூழல்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தச் செய்தி நடிகர் விக்ரமுக்கு எட்டியது.
உடனே பழைய கோபங்களையும் இழப்புகளையும் மறந்து அவருக்கு சுமார் மூன்று இலட்சம் செலவில் செயற்கைக்கால் செய்துகொடுத்திருக்கிறார்.
அதோடு கைச்செலவுக்கென ஒரு தொகையையும் கொடுத்து உதவியிருக்கிறார்.
இதனால் கண்ணீர்ப்பெருக்கோடு விக்ரமுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.