சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தைத் தடை செய்ய உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை – விவரம்

இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்…..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து இருப்பதாகக் கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதித் தலைவர்களின் பெயர்கள் கூட திரைப்படக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்குக் கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விசயமாக உள்ளது.

2015 பெருவெள்ளத்தின் போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூடத் தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படிப் பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்பது போல பீஸ்ட் திரைப்படத்தின் கதை இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts