விஷாலின் மார்க் ஆண்டனி படம் கைவிடப்பட்டது?
விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது.
விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டது.அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப்படம் இப்போது கைவிடப்பட்டுவிட்டதாகப் பேச்சு அடிபடுகிறது. விஷாலுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே இப்படம் கைவிடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
படக்குழுவின் தொடர்பில் உள்ளவர்களிடம் இதுபற்றிக் கேட்டால், இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என படத்தின் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் பிப்ரவரி 13 அன்று சொல்லியிருந்தார்.
மார்ச் தொடங்கியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதோடு, லத்தி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்கிறார் என்று நேற்று விஷால் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் மார்க் ஆண்டனி படத்துக்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டையும் சேர்த்து வைத்து படம் நின்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். விஷால் லத்தி படத்தை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.
இரண்டில் எது உண்மை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.











