சினிமா செய்திகள்

உருவாகிறது சீவலப்பேரிபாண்டி 2 – அருள்நிதி நடிக்கிறார்

1994 ஆம் ஆண்டு வெளியான படம் சீவலப்பேரி பாண்டி.நெப்போலியன் கதாநாயகனாகவும் தற்போது அம்மா நடிகையாகப் புகழ் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் நாயகியாகவும் நடித்த படம்.நடிகைகள் சில்க் ஸ்மிதா அகானா நடிகர்கள் நிழல்கள் ரவி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.இதன் கதை திரைக்கதையை கே.ராஜேஷ்வர் எழுதியிருந்தார்.

ஆதித்யன் இசையமைத்திருந்தார்.இப்படத்தின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை என்று சொல்லலாம்.ஒயிலா பாடும் பாட்டுல,கிழக்கு சிவக்கையிலே உள்ளிட்டு இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்புப் பெற்றன.

வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அந்தப்படம்.

இப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது.

இப்படத்தை ராட்சசி,கழுவேத்தி மூர்க்கன் ஆகிய படங்களை இயக்கிய கெளதம்ராஜ் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஷாலை அணுகியதாகச் சொல்லப்படுகிறது.கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்களில் விஷாலுக்கு உடன்பாடு ஏற்பட்டது என்றும் அதேசமயம்,சம்பள விசயம் சரியாக வராததால் அவர் நடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதன்பின், கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நாயகனாக நடித்த அருள்நிதியை கதாநாயகனாக்கி இப்படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை,டிமாண்டி காலனி 2 படத்தை வெளியிட்டு அதன்பின் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மற்றும் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ரெட்டதல ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இவற்றில் வைபவ் நடிக்கும் படத்தை விக்ரம் ராஜசேகர் மற்றும் அருண் கேசவ் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.இவர்களில் ஒருவர், சீவலப்பேரி பாண்டி படத்தின் கதை திரைக்கதையை எழுதிய இயக்குநர் கே.ராஜேஷ்வரின் மகன்.
அந்தத் தொடர்பின் மூலம் சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்கிறார்கள்.

அதேபோல டிமாண்டி காலனி 2 படத்தை இந்நிறுவனம் வெளியிட்டது.அதன்மூலம் அதன் நாயகன் அருள்நிதியோடு ஏற்பட்ட நல்லுறவு காரணமாக அவரையே இந்தப்படத்தின் கதாநாயகனாக்கியிருக்கிறார்கள்.

முதல்பாகத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குநர் பிரதாப்போத்தன் உடனிருந்த கே.ராஜேஷ்வர் இரண்டாம்பாகத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறாராம்.

விரைவில் இந்தப்படத்தின் அறிவிப்பு மற்றும் தொடக்கவிழா நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts