விமர்சனம்

கடைசி விவசாயி – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது. 

அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான்  ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.  

ஊரிலுள்ள எண்பது வயது முதியவர் மட்டும் விவசாயத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறார்.அவரும் குலதெய்வம் கோயிலுக்குப் படைக்க வயலில் நாற்றுவிடுகிறார். 

அதன்பின் பல சோதனைகள். அவை என்ன? என்பதை இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்திக் கலங்க அடித்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

கிராமத்து விவசாயியாக நடித்திருக்கும் நல்லாண்டி, இந்தப்படத்தில் நடித்து தம் பெருவாழ்வை உலகெங்கும் பதிவு செய்வதற்காகவே பிறந்து வளர்ந்து வாழ்ந்திருப்பாரோ? 

தூங்கி எழுந்தவுடன் கோழிகளைத் திறந்துவிடும் பரிவு, மாடுகளுக்கு உணவிடும் பாங்கு வயலை வருடிக் கொடுக்கும் பாசம் என ஒவ்வொரு காட்சியிலும் உருக வைத்துவிடுகிறார் பெரியவர்.

அவருடைய ஒவ்வொரு சொல்லும் முந்திரிப்பருப்பு. அவர் பேசும் வசனங்களை மணிகண்டன் எழுதினாரா? அல்லது அவர் பேசப்பேச எழுதிக்கொண்டாரா? அது பயிரல்ல ஆயிரம் உயிர் என்பது காலங்களைக் கடந்து நின்று நம் பெருமை சொல்லும் சொல். இச்சொல்லை வெல்லுஞ்சொல் இனிதான் வரவேண்டும்.

முன்பின் பார்த்தறியாத ஒரு முதியவர் ஒட்டுமொத்த அரங்கையும் கட்டிப்போடுவது இதுவே முதன்முறை. நீதிமன்றத்தில், நீதிபதி கேட்கும் கேள்விக்கு அவர் என்ன சொல்லப்போகிறார்? என்பதை குண்டூசி விழுந்தால்கூடக் கேட்கும் அமைதியில் எதிர்பார்க்கிறோம் என்பதே இக்கலைப்படைப்பின் மாபெரும் வெற்றிக்குச் சான்று.

மாவட்ட நீதிபதியாக நடித்திருக்கும் ரேய்ச்சல் ரெபக்காவின் வேடம் நன்று. அடிப்படை இல்லாத வழக்கு என்றாலும் காவல்துறையின் பதிவு, சட்டத்தின் ஆட்சி ஆகியனவற்றை மீறமுடியாத தவிப்பைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழின் பெருமை, குறிஞ்சிநிலத்தலைவன் முருகனின் பிரதியாக வருகிறார் விஜய்சேதுபதி. கதைக்கு அவர் தேவைப்படவில்லை என நினைக்கலாம் ஆனால் படத்தில் காட்டப்படுகிற பல தொன்மைகளில் முதன்மை அவர். 

யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார். யானை கட்டிப் போரடித்த மண்ணின் இப்போதைய நிலையை  இதன்மூலம் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

ஊர்க்காரர்களாக ஊர்க்காரர்களையே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அதனால் ஆண்டிப்பட்டிக்குள் போய்விட்டு வந்த உணர்வைப் பெறுகிறோம். ஒவ்வொருவரும் சின்னச் சின்ன காட்சிகள் வசனங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சொல்ல வரும் செய்திகளைக் காட்சிகளின் வழியே நமக்குள் ஊடுருவ வைத்திருக்கிறார். 

விஜய்சேதுபதி வேடம், மயில், யானை, பறை ஆகிய குறியீடுகளைக் கொண்டு இயக்குநர் உணர்த்தும் உன்னதங்கள் ஏராளம்.

அமைதியையே பின்னணி இசையாகப் பாவித்திருக்கும் ரிச்சர்ட்ஹார்வி படத்தின் தரத்தை உயர்த்திருக்கிறார். 

கடைசிவிவசாயி என்று எதிர்மறையாகப் பெயர் வைத்திருந்தாலும் கதையில் அவரை முதல்விவசாயியாக வைத்து ஊரே விவசாயத்தை நோக்கித் திரும்புகிறது என்று காட்சி வைத்து நம்பிக்கை நீர் பாய்ச்சியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

இதுதான் எங்கள் ஊர் இதுதான் எங்கள் வாழ்வு இவர்கள்தாம் எம்மக்கள் என உலகத்தினர் மத்தியில் ஓங்கிச்சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள இப்படம் பயன்படும். 

Related Posts