அன்பில் அவன் – திரைப்பட விமர்சனம்
ஒரு காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.அதை மீறித் திருமணம் செய்துகொள்கிறார்கள்.அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற சொந்தத் தொழில் செய்ய முனைகிறார்கள்.அதற்கு நிறைய தடங்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்வதுதான் அன்பில் அவன் கதை.
துணிச்சல்மிக்க இளைஞன் என்பதால் அசோக்செல்வன் மீது பணக்காரப்பெண் ப்ரித்திமுகுந்தனுக்குக் காதல்.ப்ரீத்திமுகுந்தன் வீட்டில் அதற்கு எதிர்ப்பு.இருவரும் திருமணம் செய்துகொண்டு வேலைக்குப் போகிறார்கள்.வேலை செய்கிற இடத்தில் நடக்கிற சிக்கல்கள் காரணமாக சொந்தத் தொழில் செய்ய நினைக்கிறார்கள்.அதை நடைமுறைப்படுத்தும்போது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரால் பல சிக்கல்கள்.அவற்றைச் சமாளித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்கிறது திரைக்கதை.
துணிவான இளைஞன் என்று தொடக்கத்திலேயே சொல்லிவிடுவதால் படம் முழுக்க அடித்து ஆடியிருக்கிறார் அசோக்செல்வன்.காதல் காட்சிகள்,மனைவியுடனான சண்டை ஆகிய காட்சிகளில் சிறப்பாக நடித்து ஏற்கெனவே தன்னை நிரூபித்திருக்கிறார்.இந்தப்படத்தின் மூலம், இனி இவரை நம்பி முழுநீள ஆக்சன் படம் எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்.
நாயகி ப்ரீத்திமுகுந்தன் வேடமும் நடிப்பும் நன்று.இவருடைய கதாபாத்திரம் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் இருக்கிறது.அதை தன் நடிப்பால் மேலும் நன்றாக்கியிருக்கிறார்.
எதிர்மறை வேடங்களை ஏற்றிருக்கும் கதிர் பாலு,மகா டெல்லி கணேஷ்,சாபுமோன் அப்துசமத் ஆகியோரும் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் அழகு,மோதல் காட்சி அதிரடி.நாயகனும் நாயகியும் தொழில் செய்யத் தேர்ந்தெடுக்கும் இடம் ஒளிப்பதிவாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விசயம்.அந்த மகிழ்ச்சியில் சிறப்பாக உழைத்திருக்கிறார்.
கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் சுகமாக இருக்கின்றன.பின்னணி இசையில் அதிரடியும் சேர்த்திருக்கிறார்.
மணிகண்டன் சீனிவாசனின் கலை இயக்கம் கதையின் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்திருக்கிறது.பலமாகவும் இருக்கிறது.
படத்தொகுப்பு செய்திருக்கும் ஆர்.கே.செல்வா,படத்தில் இடம்பெறும் பல சண்டைக்காட்சிகளை அங்கங்கே பொருத்துவதற்கே பெரும்பாடுபட்டிருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர்ஹெயின் இல்லாமல் இந்தப்படம் செய்திருக்கவே முடியாது எனும் நிலை.அதை உணர்ந்து சண்டைகளை நன்றாக வடிவமைத்து வரவேற்புப் பெறுகிறார்.
போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இந்தக்கதையை எழுதியிருக்கிறார்.
ஆர்.கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார்.சாமானியர்கள் ஏதாவதொரு தொழில் செய்து முன்னேறலாம் என நினைத்தால் இந்த சமுதாயம் எப்படியெல்லாம் இடையூறு செய்யும் என்பதை மனம் வலிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்.இந்தக் கதைக்குள் அதிரடியைச் சேர்த்து அசோக்செல்வனை ஆக்சன் ஹீரோவாக்கியிருக்கிறார்.
– கதிரோன்











