சினிமா செய்திகள்

கொம்பு வச்ச சிங்கம் ஓடுகிறதா? – விநியோகஸ்தர் பதில்

1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்தவர் சண்முகம். அவர் இப்போது முதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நேரடியாக படத்தயாரிப்பிலும் இறங்கவிருக்கும் அவரிடம் ஒரு பேட்டி.

1. உங்களைப் பற்றி..?

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்ட படங்கள் விநியோகம் செய்துள்ளேன். தொடக்கத்தில் திருச்சியை மையமாகக்கொண்டு விநியோகம் செய்தேன். போகப்போக தமிழகத்தின் எல்லா விநியோகப் பகுதிகளிலும் படங்கள் வெளியிட்டுள்ளேன்.

2. சின்ன படங்களின் விநியோகஸ்தரா? எல்லாப்படங்களும் வெளியிடுவீர்களா?

விஜய், அஜீத், விஷால் படங்கள் உட்பட சின்னப்படங்கள் வரை எல்லாவகைப் படங்களையும் வெளியிட்டுள்ளேன்.

3. விநியோகஸ்தர் அனுபவங்கள் பற்றி..?

பல நேரங்களில் எதிர்பாராத விதமாகப் பல சிக்கல்கள் வரும். பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை வாங்கி வெளியிட்டோம். வெள்ளிக்கிழமை படம் வெளியாகி நல்ல ரிப்போர்ட். வசூலும் பரவாயில்லை. அடுத்தடுத்த நாட்களில் பிக்கப் ஆகும் என்கிற நிலையில் திடீரென ஓர் அரசியல்தலைவர் கைது என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் திரையிடவே முடியவில்லை. அதனால் அப்படத்தை வெளியிட்ட எல்லா விநியோகஸ்தர்களும் நட்டத்தைச் சந்தித்தனர்.அதை இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து ரஜினி படம் இயக்கப்போனார். கார்த்திக்கும் நல்ல உயர்வு இருந்தது. நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

4.இப்போது கொம்புவச்ச சிங்கம்டா படத்தை தமிழ்நாடு முழுவதும் வாங்கி வெளியிடுவது பற்றி..?

ஏற்கெனவே எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் பெரிய வெற்றி. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. எனவே இந்தப்படமும் வெற்றியாக அமையும் என்று நம்பினேன். அதோடு இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஏற்கெனவே தயாரித்த தடம், குற்றம் 23 ஆகிய இரண்டு படங்களும் வெற்றி. இந்தக் காரணங்களால் இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ளேன்.

5. எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்துள்ளதா..?

முதல்நாள் போகியன்று வசூல் குறைவாக இருந்தது. பொங்கலிலிருந்து நன்றாகப் போகிறது. எல்லோருக்கும் இலாபம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

6.இந்தப்படத்தை திருச்சியில் நீங்கள் வெளியிடாமல் வேறொருவருக்குக் கொடுத்தது எதனால்?

நான்  படத்தயாரிப்பில் இறங்கவிருப்பதால் சென்னையில் அலுவலகம் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் திருச்சியில் கவனம் செலுத்தவியலாது. எனவே வேறொருவருக்குக் கொடுத்துவிட்டேன்.  

7. படத்தயாரிப்பில் இறங்குகிறீர்களா? அது பற்றிய விவரம்..?

நண்பரோடு சேர்ந்து ஹாட்ஸ்பாட் என்கிற வெப்சீரிஸ் தயாரித்தோம்.அவற்றில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு முழுநீளப் படங்கள் தயாரிக்கவிருக்கிறோம். 

8.அப்படங்கள் குறித்த விவரங்கள்..?

இரண்டு படங்கள் தயாரிக்கவிருக்கிறோம். அதன் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளீயாகும்.

9.வழக்கமான தயாரிப்பாளர்கள் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் படத்தயாரிப்பில் இறங்குவது பற்றி..?

முறையாகச் செய்தால் சினிமா நல்ல தொழில்தான்.திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்தால் பாதுகாப்பாக இருக்கும்.  

– அன்பு

Related Posts