இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் ஆர்.வி.உதயகுமார் – விவரம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டது. அதில் ஆர்.கே.செல்வமணி அணியினர் பெரும்பான்மை வெற்றி பெற்றனர்.
இவ்வாண்டு தேர்தல் தொடர்பான முடிவெடுக்கப்பட்ட பொதுக்குழுவின்போதே, நான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துவிட்டார்.
அதேபோல கடந்தாண்டு போல இருக்கும் நிர்வாகிகளுக்கு எதிராக யாரும் அணிதிரளவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே எதிரணி உருவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதனால்,இம்முறை தலைவர் பொறுப்புக்கு யார் வருவார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு விடை கிடைத்துவிட்டது. கடந்தமுறை செயலாளராக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தலைவர் பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கிறார்.அதேபோல கடந்தமுறை பொருளாளராக இருந்த இயக்குநர் பேரரசு செயலாளர் பொறுப்புக்கும் போட்டியின்றித் தேர்வாகியிருக்கிறார்களாம்.இவ்விருவருமே இயக்குநர் சங்க நிர்வாகத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர்கள் என்பதால் எதிர்ப்பின்றி தேர்வு நடந்துவிட்டதாம்.
அதோடு பொருளாளர் பொறுப்புக்குப் புதிய வரவாக இயக்குநர் சரண் வந்துள்ளார். அவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டாராம்.
துணைத்தலைவர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.அது மார்ச் 16 அன்று நடக்கவிருக்கிறது.
தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் போட்டியிட்டுத் தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் சுமார் 2600 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் சுமார் இரண்டாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











