சந்தானம் இல்லைன்னா நான் இல்லை – விஜய்சந்தர் நெகிழ்ச்சி
மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கார்டியன்.இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.அவரோடு, சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார்.
கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தப்படத்தை, சிம்பு,ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச்,விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்சந்தர் தயாரித்துள்ளார்.
இப்படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு மார்ச் 4 அன்று நடந்தது.
அதில், கார்டியன் படத்தயாரிப்பாளர் இயக்குநர் விஜய்சந்தர், நாயகி ஹன்சிகா, நடிகர் தங்கதுரை, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் உள்ளிட்ட படக்குழுவினரும் படத்தின் இயக்குநர்கள் சபரி – குருசரவணன் ஆகியோரின் குருநாதரான இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமாரும் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வில் பேசிய நடிகர் தங்கதுரை, நான் உட்பட பலரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விஜய்சந்தர்.அவராலேயே நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் அவருக்கு என நன்றிகள் என்று பேசினார்.
அதன்பின் இறுதியாகப் பேசிய இயக்குநர் விஜய்சந்தர், நான் அறிமுகப்படுத்தியதால் இங்கு இருப்பதாக தங்கதுரை பேசினார். அதுபோல் என்னை சிம்புவிடம் அறிமுகப்படுத்தியவர் சந்தானம்.அவர்தான் என்னை நம்பி அழைத்துக் கொண்டுபோய் சிம்புவிடம் விட்டார்.அவர் சொன்னதால் சிம்பு கதை கேட்டார்.அதனால் வாலு படம் கிடைத்தது. அன்றிலிருந்து மிகச் சிறந்த திறமைசாலியான சிம்புவுடனான நட்பு இன்னும் தொடருகிறது.வாலு படம் காரணமாகத்தான் விக்ரம் சாரை வைத்து ஸ்கெட்ச் படம் செய்தேன்.அந்தப்படமும் விக்ரம் சாரும் நான் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகக் காரணம். இவற்றிற்கடுத்து எனக்குக் கிடைத்த அற்புதமான மனிதர் விஜய்சேதுபதி.
இப்படி வரிசையாக எல்லாச் சிறப்புகளும் கிடைப்பதற்கான தொடக்கப் புள்ளி சந்தானம்தான். அவர் இல்லையென்றால் நானில்லை என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.











