காந்தாரா 2 தமிழ்நாடு வியாபாரம் – வியப்பில் தமிழ்த் திரையுலகம்
ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.
கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அப்படம், அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதை சொல்லலில் உண்மையாகச் சித்தரித்த இப்படம், உலகளாவிய இரசிகர்களை ஈர்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக்கியது.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது.அப்படத்தின் 100 ஆவது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, “இப்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்து உருவாகும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது.
இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை விற்பனை நடந்து முடிந்து தமிழ்நாடு திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தின் சென்னை செங்கல்பட்டு உரிமை சுமார் 12 கோடிக்கும், கோவை உரிமை சுமார் ஐந்தரை கோடிக்கும் மதுரை,சேலம், திருச்சி ஆகிய பகுதிகளின் உரிமை சுமார் ஒன்பது கோடிக்கும்,திருநெல்வேலி மற்றும் சில உரிமைகள் சுமார் ஐந்து கோடியே நாற்பது இலட்சத்துக்கும் விற்பனை ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மொத்தம் சுமார் 32 கோடி அளவில் விற்பனை ஆகியிருக்கிறது என்பது மட்டுமின்றி இவை அனைத்தும் எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் விற்பனை ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேரடித் தமிழ்ப்படங்கள் அதுவும் பெரிய கதாநாயகர்களின் படங்களின் தமிழ்நாடு உரிமை விற்பனை கூட டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக முறையில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கன்னட மொழிமாற்றுப் படத்துக்குத் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் விற்பனை எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இவ்வளவு விற்பனை அதுவும் எம் ஜி அடிப்படையில் என்பதால் படத்தைத் தயாரித்திருக்கும் ஹொம்பாலே நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.











