சினிமா செய்திகள்

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் இந்தி நடிகர் அமீர்கான்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

லகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கிரண்ராவைக் காதலித்து டிசம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டார். மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர்.

திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது, அமீர்கான் மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்கப் போவதில்லை. ஆனால், சக பெற்றோராக, குடும்பமாக இணைந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே நாங்கள் பிரிவதற்கு திட்டமிட்டு இருந்தோம். தற்போது அதை முறைப்படுத்துவதற்கான சூழல் அமைந்தது.

எங்கள் மகன் ஆசாத்துக்கு ஓர் அர்ப்பணிப்பான பெற்றோராக நாங்கள் நீடித்திருப்போம். அவனை நாங்கள் இருவரும் சேர்ந்தே பராமரித்து வளர்ப்போம். திரைப்படங்களிலும், பாணி அறக்கட்டளை உள்ளிட்ட வேலை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.

எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரது தொடர் ஆதரவுக்கும், இந்த உறவின் பரிணாமம் குறித்த அவர்களது புரிதலுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் இந்த முடிவைப் பாதுகாப்பு உணர்வுடன் எடுத்திருக்க இயலாது.

எங்கள் நலம் விரும்பிகளிடம் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம். எங்களைப் போலவே நீங்கள் விவாகரத்து என்பதை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கமாகப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்”.

இவ்வாறு அமிர்கான் – கிரண் ராவ் இணை தெரிவித்துள்ளது.

Related Posts