சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் பட இசையமைப்பாளர் ஒப்பந்தம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார்.

அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது.

ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை.

இதற்கிடையே தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் இயக்கப்போகிறார் என்றும் அது சம்பந்தமான வேலைகள் நடக்கின்றன என்று சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அவர் ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

சிவகார்த்திகேயனின் மான்கராத்தே படத்தின் தயாரிப்பில் பங்குபெற்று அப்படம் பெரிதாக உதவியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போதிருந்தே அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்கிற செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இப்போது அது உறுதியாகவிருக்கிறது என்கிறார்கள்.

மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தைத் தயாரித்த பி.மது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

அப்படத்துக்கான வேலைகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.

முதல்கட்டமாக அந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, ரஜினியின் தர்பார் ஆகிய படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அனிருத் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Related Posts