சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா கார்த்தி செய்வதை விஜய் அஜித் செய்வார்களா?

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தற்போது நிலைமை குறித்து பேசப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தயாரிப்பாளர்கள் பேசுகையில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி ஊழியர்களைப் போலவே சம்பளம் வழங்கப்படும் என்றனர்.

இதையடுத்து, நடிகர் சூர்யா பேசும் போது, தனது உதவியாளர்களின் சம்பளங்களைத் தானே வழங்குகிறேன் என்று உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் விஷாலும் தங்களது உதவியாளர்களின் சம்பளங்களைத் தாங்களே வழங்குவதாக தெரிவித்தனர்.

இதன்மூலம் தயாரிப்பாளருக்கு 10 முதல் 15 லட்சம் வரை குறையும் என்று கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சூர்யா கார்த்தியைத் தொடர்ந்து விஜய்யும் அஜித்தும் இந்த அறிவிப்பைச் செய்தால், அதை எல்லா நடிகர்களுமே கடைபிடிக்கத் தொடங்கிவிடுவார்கள், இது பேச்சோடு நிற்காமல் நடைமுறைக்கு வந்துவிடும் என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள். செய்வார்களா?

Related Posts