கண்ணீர் விட்ட சிம்பு கதறிய இரசிகர்கள் திகைத்த படக்குழு – மாநாடு நிகழ்ச்சியில் பரபரப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 18) ‘மாநாடு’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பான விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினருடன் சிலம்பரசன்,பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் அனைவரும் பேசிமுடித்த பின் இறுதியாகப் பேச வந்தார் சிம்பு. உடனேஎ, இரசிகர்கள் பக்கமிருந்து அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்ற முழக்கங்கள் எழுந்தன. எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார்.
இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதிரியாக இருக்கிறது.என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. சுற்றி நிறைய பிரச்சினை செய்கிறார்கள். ஆனால், அப்படியான சூழலை எல்லாம் கடந்து தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொன்னேன். அதேபோல எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படத்தைக் கொண்டுவந்துவிட்டார் என்ற சிம்பு, படத்தில் நடித்த மற்றவர்கள் பற்றியும் படப்பிடிப்பில் இருந்த சிரமங்களையும் பற்றிப் பேசினார்.
அதன்பின்,
யுவன் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அனைவரும் சொன்னது போல எனக்கென்றால் பயங்கரமாக இசையமைத்துவிடுவார். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிக் கொள்வார். அவரிடம் உங்கள் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கொடுங்கள். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வேன்.
இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது நிறைய அடிபட்டது. ரிஸ்க் எடுத்துச் செய்துள்ளேன்.எல்லாம் உங்களுக்காக என்று ரசிகர்களை நோக்கிச் சொன்னவர் கண்கலங்க்கிவிட்டார். அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. அழுது கொண்டே ஒலிவாங்கியை விட்டு நகர்ந்தார்.
அழாதே தல உங்களுக்கு நாங்க இருக்கோம் என்று இரசிகர்கள் சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தனர். பின்பு தன்னைத் தேற்றிக்கொண்டு ஒலிவாங்கி முன் வந்தவர்,
நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், என்று இரசிகர்களை நோக்கிக் கைகாட்டினார்.
அவர்களும், நாங்க இருக்கோம் என்று உணர்ச்சி பொங்கக் குரல் எழுப்பினர். அதன்பின், நன்றி நன்றி என்றபடியே விடைபெற்றார்.
அந்த நிமிடங்களில் அரங்கம் உணர்ச்சிம்யமாக இருந்தது. படக்குழு உட்பட மேடையில் இருந்த அனைவரும் திகைத்துப் போய் சிம்புவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.












