வடசென்னை படப் பெயர் சொல்லி பெரும் மோசடி – படக்குழு அதிர்ச்சி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை.
2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும்போதே இதன் இரண்டாம்பாகம் வெளிவரும் என்று சொன்னார்கள்.
ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் தனித்தனியே வெவ்வேறு படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் வடசென்னை 2 நடக்குமா? என்பதே ஐயமாக இருக்கிறது.
உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஒரு முகமறியா கூட்டம், வடசென்னை 2 படத்துக்காக புதுமுக நடிகர்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறதாம்.
வடசென்னை 2 படத்தில் இளம்வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி முதலாண்டு படிக்கும் மாணவர்கள் தேவை என்று வாட்சப் மூலம் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
அதை நம்பி புகைப்படம் அனுப்பியவர்களை, நேர்முகத் தேர்வுக்கு திருநெல்வேலி வரச்சொல்லியிருக்கிறார்கள்.
நுழைவுக்கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய், கொரோனா தடுப்பூசி சான்று பெறுவதற்காக பதினைந்தாயிரம் இவையில்லாமல் இன்றும் சில காரணங்களைக் கூறி ஒருநபருக்கு தலா ஐம்பதாயிரம் வரை கேட்டிருக்கிறார்கள்.
அதை நம்பிப் பலபேர் பணம் கட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரைத்துறையில் உள்ள உறவினரிடம் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்.
அவர், வெற்றிமாறன் குழுவிடம் சொல்லியிருக்கிறார்.
உடனே, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கத் தயாராகியிருக்கிறார்கள்.
அதற்குள் எவ்வளவு பேர் ஏமாந்து போய் பணம் கட்டி மோசம் போனார்களோ?











