விமர்சனம்

கேர் ஆஃப் காதல் – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல்.  

வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்)  பார்கவியின் (ஐரா) பதின்பருவக் காதல் தாடி (வெற்றி), சலீமாவின் (மும்தாஜ்சர்கார்) இளம்பருவக் காதல், பழனி (முதல்மரியாதை தீபன்) ராதாவின் (சோனியா கிரி) பேரிளம்பருவக் காதல் ஆகிய நான்கு வகையான காதல் கதைகளை நயம்படச் சொல்லியிருக்கிறார்கள்.

சிறுவன் நிகேஷும் சிருமி சுனிதாவும் இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார்கள்.

ஜோசப்பாக நடித்திருக்கும் கார்த்திக் ரத்னம் துடிப்புடன் இருக்கிறார். காதல் வந்தவுடன் ஏற்படும் மாற்றங்களை அழகாக வெளிப்படுத்துகிறார். 

பார்கவியாக நடித்திருக்கும்  ஐரா அட்டகாசம் செய்திருக்கிறார். ரவுடிகளிடம் சீறுவதிலும்  நாங்கள் எல்லாம் இப்படி என்று பூணூலை இழுத்துவிடுவது போல் பாவனை செய்வதிலும் கைதட்டல் பெறுகிறார். 

தாடியாக நடித்திருக்கும் வெற்றியின் பாத்திரப்படைப்பு, இதுகாலம்வரை வந்த எல்லாக்காதலர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. காதலியை மிதிவணியில் உட்காரவைத்துக் கூட்டிப்போய் தொழிலுக்கு விடுவதெல்லாம் காதலின் உச்சம். அந்தச் சங்கடத்தையும் அதையும் மீறிப் பூக்கும் காதலையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சலீமாவாக நடித்திருக்கும் மும்தாஜ்சர்கார், திமிருடன் திரியும்போது மிரள வைக்கிறார், வெற்றியின் மார்பில் சாய்ந்து விசும்பும்போது கலங்க வைக்கிறார்.

ராதாவாக நடித்திருக்கும் சோனியாகிரி அமைதியான அழகு. 

படத்தில் பட்டையைக் கிளப்பும் வேடம் தீபனுக்கு. அதைச்சிரத்தையுடன்  செய்திருக்கிறார். வெள்ளந்தியான முகமும் குரலும் அவர் நடிப்புக்குப் பெரிதும் பலம். உடற்பயிற்சிக்காகக் கைவீசி நடப்பது போல படத்தையும் பெருமிதமாக நடக்கவிட்டிருக்கிறார்.சின்ன வயசுல காதல்னா என்று அவர் கடைசியில் சொல்லும் கதை புல்லரிக்க வைக்கிறது.

குணசேகரனின் ஒளிப்பதிவும் அகஸ்தியின் இசையும் கதைக்குத் தேவையான அளவு அமைந்திருக்கின்றன.

இப்படி ஒரு கதையை எழுதிய மகா பாராட்டுக்குரியவர். பள்ளிப்பருவத்தைத் தவிர்த்திருந்தால் நலம்.

திரைக்கதை எழுதி இயக்கிய ஹேமம்பர் ஜஸ்டி எளிமையாக அதேசமயம் மிக அழுத்தமாகச் சொல்லவேண்டியவற்றைச் சொல்லிச் செல்கிறார். 

பள்ளிப்பருவத்தில் விநாயகர், பதின்பருவத்தில் ஏசு கிறிஸ்து, இளம்பருவத்தில் அல்லா ஆகிய எல்லா தெய்வங்களுமே உண்மையை, அன்பைக் காக்கவில்லை என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்கள்.

இருபது வயதிலும் காதலிக்கக் கூடாது நாற்பது வயதில் காதலித்தாலும் தப்பு என்றால் எப்படி? என்று ராதாவின் மகள் கேட்கும் கேள்வி சவுக்கடி.

கேர் ஆஃப் காதல் – கேர் ஆஃப் சினிமா

Related Posts