சினிமா செய்திகள்

இளையராஜாவின் இசைக்கு எழுதியது ஆசீர்வாதம் – கவிஞர் அருண்பாரதி மகிழ்ச்சி

சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது.

உன்னைப் போலே இருப்பான்
உந்தன் பின்னால் நடப்பான்
நண்பன் போலே சிரிப்பான்
தினமும் தினமும் இவனே
பின்னால் வலையை விரிப்பான்
உந்தன் தலையை எடுப்பான்
கண்ணைக் கட்டிப் போகும் அவனே
கபடதாரி…. கபடதாரி…….

என்று போகும் அந்தப்பாடலை எழுதியுள்ள அருண்பாரதியுடன் ஓர் உரையாடல்….

இந்தப்பாடல் வந்ததிலிலிருந்தே எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இப்போது படமும் வெளியான பின்பு மேலும் அதிக வரவேற்பு கிடைத்துவருகிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றவரிடம் அடுத்தடுத்து எழுதும் பாடல்கள் குறித்துக் கேட்டபோது…

கபடதாரிக்கு அடுத்து அடுத்த வாரமே வெளியாகவிருக்கும் படம் சிதம்பரம் ரெயில்வே கேட். இந்தப்படத்தில் இசைஞானி இளையராஜா அய்யா இசையமைத்துப் பாடி ஆண்பாவம் படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதய்யா என்கிற பாடலை அதே மெட்டை வைத்துக் கொண்டு மாற்றி எழுதியிருக்கிறேன்.

கார்த்திக்ராஜா அரேஞ்மெண்டில் அந்த மெட்டுக்கு, காதல் இனிக்குதய்யா என்று மொத்தமும் மாற்றி எழுதியிருக்கிறேன். காதல் செய்தல் நல்லது என்கிற மாதிரி மொத்த வரிகளும் இருக்கும்.

இந்தப்பாடலை இயக்குநர் வெங்கட்பிரபுவும் நடிகர் பிரேம்ஜியும் பாடியிருக்கிறார்கள்.

இந்தப்பாடலை கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார்.

இளையராஜா இசையில் எழுதியது, அப்பாடலை கமல் சார் வெளீயிட்டது ஆகியனவற்றால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக மகிழ்ந்தேன்.

அடுத்து, தொடர்ந்து விஜய் ஆண்டனி சார் படங்களில் பாடல்கள் எழுதி வருகிறேன். சார் நடித்த பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் பாடலைப் போன்றதொரு செண்டிமெண்ட் பாடலை பிச்சைக்காரன் 2 படத்திற்காக எழுதியிருக்கிறேன்.

கோடியில் ஒருவன், காக்கி ஆகிய விஜய் ஆண்டனி சார் படங்களிலும் சசிகுமார் சரத்குமார் ஆகியோர் நடிக்கும் நா நா ஆகிய படங்களிலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

திரைப்பாடல்கள் மட்டுமின்றி கவிதை நூல்கள் வெளீயிடுவதிலும் ஆர்வம் காட்டுகிறேன். தற்போது கொரோனா காலத்துக்கவிதைகள் என்கிற நூலை வெளியிட்டிருக்கிறேன் புதியபானையில் பழைய சோறு, அம்மாச்சி ஆகிய நூல்களும் விற்பனையில் இருக்கின்றன.

என்கிறார் மகிழ்ச்சியுடன்.

Related Posts