சினிமா செய்திகள்

மாஸ்டர் சர்ச்சை – விஜய் அதிருப்தி தயாரிப்பாளர் மன உளைச்சல்

கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில்,திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே இன்று (ஜனவரி 29) அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியானது ‘மாஸ்டர்’.

திரையரங்கில் வெளியான 16 ஆவது நாளில் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். இதனால் சர்ச்சை உருவானது.

இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் மற்றும் தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் கூட்டுக்கூட்டம் ஆகியன நடைபெற்றன.

இதன்முடிவில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, இப்படத்தின் இரண்டாவது வார வசூலில் ஒப்பந்தத்தைவிட பத்து விழுக்காடு குறைவாக வாங்கிக் கொள்வதெனவும் மூன்றாவது வார வசூலில் தயாரிப்பாளருக்குப் பங்கு வேண்டாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

அதோடு, பெரிய பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகே இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், சிறு பட்ஜெட் படங்களை 30 நாட்களுக்குப் பிறகு வெளியிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்தவர் தயாரிப்பாளர் லலித்குமார்.

திட்டமிட்டதைவிடப் பத்து மாதங்கள் கழித்து படம் வெளியானது. அதற்குள் திரையுலகிற்குள்ளும் திரையுலகுக்கு வெளியிலும் இப்படத்துக்குப் பல்வேறு சிக்கல்கள். அவற்றை எல்லாம் பொறுமையாக எதிர்கொண்டு சரியான முறையில் கையாண்டு படத்தைத் திரைக்குக் கொண்டுவந்தார்.

இதனால், விநியோகஸ்தர்கள், திரையரங்குக்காரர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் படத்தின் நாயகன் விஜய்யும் அவரை மிகவும் பாராட்டினர்.

எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்த அவர், 16 ஆம் நாளில் படத்தை இணையத்தில் வெளீயிடும் உரிமையைக் கொடுத்து கெட்ட பெயர் சம்பாதித்துவிட்டார்.

அப்படிக் கொடுக்கும் முன்பு இப்படத்தின் விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி இருந்தால் கூட இவ்வளவு சிக்கல் வந்திருக்காது.

யாரிடமும் சொல்லாமல் இப்படி ஒரு முடிவெடுத்ததன் விளைவு, முன்கூட்டியே இணையதளத்தில் வெளியிடுவதால் கிடைக்கக் கூடிய பணத்தை விடவும் அதிகப்பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

பண இழப்பு ஒருபக்கம் இன்னொரு பக்கம், இவர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த விஜய், இந்தச் சர்ச்சைகளால் அதிர்ந்து போய் எல்லாவற்றையும் சரியாகச் செய்து கடைசியில் இப்படி சொதப்பிவிட்டாரே என்று அதிருப்தியடைந்துவிட்டாராம்.

இதனால் தயாரிப்பாளர் லலித்குமார் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts