சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மட்டும் எச்சரிக்கையா? – கொதிக்கும் ரசிகர்கள்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிறது `சர்கார்’ திரைப்படம். இந்தப் படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் வாயில் சிகரெட் பிடித்தபடி உள்ள நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீக்காவிடில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த எச்சரிக்கை நோட்டீஸை அனுப்பியுள்ளது. புகைபழக்கத்தை இளைஞர்களிடமிருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதை விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

புகைபிடிக்கும் எல்லாப் படங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளியான அசுரவதம் படத்தில் கூட சசிகுமார் திரையில் தோன்றுவதற்கான அடையாளமாகவே புகைக்கும் காட்சிதான் வந்தது.

இவை எல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல் விஜய்க்கு மட்டும் எச்சரிக்கை விடுப்பது சரியா? நல்ல விசயம் என்றால் எல்லோருக்கும் பொருந்தும்தானே? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய் முன்னணி நடிகர் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருப்பவர் என்பதாலேயே அவர் படம் அதிகமான கவனத்துக்கு ஆளாகிறது என்றும் சொல்கிறார்கள்.

Related Posts