அந்தப்படத்தில் நடிக்கவேண்டாம் – விஜய்சேதுபதிக்கு சீனுராமசாமி கோரிக்கை
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.
முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றெல்லாம் பேசியவர்.
இதனால் உலகத்தமிழர்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அவருடைய வாழ்க்கைக் கதையில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக இருக்கிறார்.
எனவே,அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 8,2020 அன்று வெளியிடப்பட்டது.
அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோரிக்கைகள் விஜய்சேதுபதி முன் வைக்கப்பட்டன.
இந்தப்படத்தையும் விஜய்சேதுபதியையும் பாராட்டி இராஜபக்சே மகன் ட்வீட் போட்டதும் விஜய்சேதுபதிக்கான எதிர்ப்பு மேலும் அதிகமானது.
இந்நிலையில் விஜய்சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான சீனுராமசாமியும், 800 படத்தில் நடிக்கவேண்டாம் என விஜய்சேதுபதிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்….
விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்.
விஜய்சேதுபதி நடிக்கும்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.
மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?
இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.
அவருடைய கருத்தை அனைவரும் ஆதரித்து பின்னூட்டமிடுகிறார்கள்.











