எக்ஸ் வீடியோஸ் – திரைப்பட விமர்சனம்
டிஜிட்டல் யுகம் என்கிற பெயரில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப் பழகியதாலும் குறிப்பாக நம் கையில் இருக்கும் நவீன கைபேசி எவ்வளவு ஆபத்துகளை நமக்குக் கொண்டுவருகின்றன என்பதையும் விளக்கிச் சொல்லும் படம்தான் எக்ஸ் வீடியோஸ்.
ஆபாச இணையதளங்களைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளரின் பார்வையில் விரிகிறது படம்.
நாயகி ஆகிருதிசிங்கின் அரைநிர்வாணக் காட்சிகள் கிளுகிளுப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கிலியை ஏற்படுத்துகின்றன.
துணிச்சலாக நடித்திருக்கிறார் நாயகி.
இன்னொரு நாயகி ரியாத்மிகாவும் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்.
நாயகன் அஜய்ராஜ் மிகவும் பொறுப்புடன் நடித்து வேடத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.
படத்தில் ஆபாசப்படங்களை விரும்பிப் பார்க்கிறவர்களுக்கு நிகழும் சோகங்கள், நிஜத்தில் பார்ப்பவர்களுக்குக் கடும் எச்சரிக்கை.
கேமிராவிலோ செல்போனிலோ ஒரு காட்சியைப் பதிவு செய்துவிட்டாலே. அது பொதுச்சொத்தாகிவிடுகிறது என்கிற அதிரவைக்கும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஜோசுந்தர்.
வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பெண்ணுடலைக் காட்சிப்படுத்தியிருந்தாலும் கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் ஆபாசம் வெளிப்படவில்லை.
ஒரு ஆபாச காணொலி இணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அதற்கு அழிவே இருக்காது என்கிற உண்மையும் இறுதிக்காட்சியில் நாயகி எடுக்கும் முடிவும் படத்துக்குப் பெரும்பலம்.
ஆபாசத்தை வியாபாரமாக்க எண்ணாமல் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்திய இயக்குநருக்கும் அதைப் படமாக எடுத்த தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள்.