காஞ்சனா 4 கைமாறியது எதனால்?
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார்.
திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது.
‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தைத் தொடங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். அவரைத் தொடர்ந்து மற்றொரு நாயகியாக இந்தி நடிகை நோரா ஃபதேகியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
காஞ்சனா 4 படத்தை மும்பையைச் சேர்ந்த கோல்டுமைன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.
காஞ்சனா 2 படத்தை விநியோகம் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதைத் தொடர்ந்து காஞ்சனா 3 படத்தைத் தயாரித்தது அந்நிறுவனம்.
அப்படம் வெற்றி பெற்றதால் காஞ்சனா 4 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது.
இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு மும்பையைச் சேர்ந்த கோல்டு மைன்ஸ் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
ஏன் இந்த மாற்றம்? சன் பிக்சர்ஸ் இப்படத்தைக் கைவிட்டது ஏன்?
இப்படத்தின் திரைக்கதையை முழுமையாக எழுதிவிட்டு அதற்கான மொத்த செலவுத் தொகை சுமார் நூறு கோடி ஆகும் என்று சொல்லியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
அவ்வளவு தொகையைச் செலவிட முடியாது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொல்லிவிட்டதாம்.அந்நிறுவனம் இந்தப்படத்துக்காக அதிகபட்சம் சுமார் அறுபது கோடி கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.ஏனெனில் திரைப்பட வியாபாரம் முன்புபோல் இல்லை,இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளுக்கான வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது என்பதால் அறுபது கோடிக்கு மேல் செலவு செய்ய இயலாது என்பது அந்நிறுவனத்தின் முடிவு.
அதன்பின் பல தயாரிப்பாளர்களைப் பார்த்துப் பேசி இறுதியாக கோல்டு மைன்ஸ் நிறுவனத்துக்குப் படம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.இடையில் சில மாத்ங்கள் ஓடிவிட்டன.அதனால் படத்தின் மொத்தச் செலவுத் தொகையும் கூடிவிட்டது.
இப்போது இந்தப் படத்தின் மொத்தச் செலவுத் தொகை சுமார் நூற்றிருபது கோடி என்கிறார்கள்.இதை கோல்டு மைன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் கடந்த வாரம் எவ்வித அறிவிப்புமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.











