விஷ்ணுவிஷாலின் தம்பி கதாநாயகனாக நடிக்கும் படம் – விவரங்கள்
நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ‘ஓகோ எந்தன் பேபி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். சுமார் 400-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரும், நடிகருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராகுல் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக சமூகவலைதளத்தில் புகழ்பெற்றுள்ள மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின்,கஸ்தூரி,கருணாகரன்,ரெடின் கிங்ஸ்லி,கீதா கைலாசம்,பாலாஜி சக்திவேல்,சுஜாதா பாபு,நிர்மல் பிள்ளை,அருண் குரியன், விஜயசாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜென் மார்டின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.சி.பிரணவ் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். முகேஷ் மஞ்சுநாத் கதை எழுத, சாரதா மற்றும் முகேஷ் மஞ்சுநாத் இணைந்து கூடுதல் வசனம் மற்றும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அஹிக் ஏ.ஆர், கார்த்திக் நேதா, வேணு செல்வன், ரைசிங் ராப்பர் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது ஓகோ எந்தன் பேபி.
இந்நிலையில் இப்படம் குறித்து நாயகனாக அறிமுகமாகும் ருத்ரா கூறியதாவது….
சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் திட்டம். அண்ணன் நடிகரான போது எங்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது.அப்போதே நானும் நடிகராவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால், சினிமாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு அண்ணனின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்புப் பணியையும் கவனித்து வந்தேன்.இதன் மூலம் சினிமா மீதான் புரிதல் வந்தது.அந்த நேரத்தில் இந்தக்கதை வந்தது.இப்போது நாயகனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் படம் பற்றிக் கூறுகையில்….
முகேஷ் மஞ்சுநாத் என்பவரது கதை இது. நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். விளம்பரப் படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் திரைப்படம் இயக்குவது காலதாமதமாகி விட்டது.
மாடர்ன் லவ் படத்தில் நான் ஒரு எபிசோட் இயக்கியிருந்தேன்.அதைப் பார்த்துவிட்டு விஷ்ணு என்னை அழைத்தார்.முகேஷ் மஞ்சுநாத் என்பவரது கதை இது. நான் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன். இந்தக் கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தத் தலைப்பும் விஷ்ணு தான் சொன்னார். அவர் முதல் முறை தலைப்பு சொன்ன போதே எனக்குப் பிடித்துவிட்டது.ருத்ராவுக்கு இந்தக்கதை பொருத்தமாக இருக்கும். இந்தக் கதையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வது என்று நாயகன் மூன்று காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிக்காட்ட வேண்டும்.அதற்கு ருத்ரா மிக சரியானவராக இருந்தார்.அவரது முகத்தில் மூன்று விதமான காலக்கட்டத்தின் வளர்ச்சியைக் காட்டுவது எனக்கு எளிதாக இருந்தது. எனவே, இந்தப் படம் ருத்ராவுக்கு மிகச்சரியான அறிமுகமாக இருக்கும் என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் படம் பற்றிக் கூறியதாவது….
என் தம்பியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் திட்டம்.அதற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் இதன் மூலம் அறிமுகப்படுத்துகிறேன்.இது முழுக்க முழுக்க காதல் கதை.என் படங்களில் காதல் இருந்தாலும், முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படங்களில் நடித்ததில்லை. ஆனால், என் தம்பி முதல் படத்திலேயே ஒரு காதல் கதையில் அறிமுகமாவது மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் நான் நடிகர் விஷ்ணு விஷாலாகவே நடிக்கிறேன்.ருத்ரா உதவி இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கிறார்.நான் ஆக்ஷன், திரில்லர் ஜானர் படங்களில் நடித்திருந்தாலும் காதல் கதைகளில் நடிக்கவில்லை.அதனால் எனக்கு ஒரு காதல் கதை படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.அந்த நேரத்தில் எனக்கு வேறு ஒரு ஜானர் கதையைச் சொல்ல வரும் உதவிஇயக்குநரான ருத்ரா, என் ஆசையைத் தெரிந்து கொண்டு எனக்காக ஒரு காதல் கதையை எழுதுகிறார்.அதன் பிறகு என்ன ஆனது என்பதை முழுமையான காதல் படமாகச் சொல்வது தான் ‘ஓகோ எந்தன் பேபி’.
இந்தக் கதையை நான் சில வருடங்கள் முன்பு கேட்டேன்.எனக்கு ரொம்ப பிடித்தது.ஆனால்,அதில் என்னால் நடிக்க முடியாது என்பதால் கதையை மட்டும் நாங்க வாங்கி வைத்துக் கொண்டேன். ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்த இந்தக் கதை சரியாக இருக்கும் என்பதால் நானே இதைத் தயாரிக்கவும் முடிவு செய்தேன்.
ருத்ராவுக்கு இந்தக் கதை மிகப் பொருத்தமாக இருக்கும். அவர் இயல்பாகவே துறுதுறுவென்று இருப்பார் என்பதால் அவருக்குக் காதல் கதை மிகப் பொருத்தமாக இருக்கும். நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் கூட எனக்கு முத்தக் காட்சி அமைந்ததில்லை.ஆனால் ருத்ராவுக்கு முதல் படத்திலேயே மூன்று முத்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன.ருத்ரா எனது சித்தி மற்றும் பெரியப்பா பையன்.அவரது அப்பாவுக்கும்,என் அப்பாவுக்கும் ஒரே நேரத்தில் தான் திருமணம் நடந்தது.நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.ருத்ராவின் அப்பா,எனது சித்தப்பாவுக்கு தான் சினிமா மீது ஆர்வம். நான் நடிக்க வந்ததற்கும் அவர் தான் காரணம். அவர் தான் சிறு வயதில் இருந்தே சினிமா சினிமா என்று இருப்பார்.அவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.பெரியதாக அவரால் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. அவரது கனவை நிறைவேற்றும்படியாக தான் ருத்ரா சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
சினிமாவில் என்னுடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையை ருத்ரா பார்த்திருக்கிறார்.உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.அதனால் அவருக்கு சினிமா மீதான புரிதல் இருக்கிறது.சினிமாவுக்காக நடிப்பு, பயிற்சி என தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை நாங்க பார்த்துவிட்டோம். பலர் பார்த்தார்கள். ருத்ரா அறிமுகம் என்றாலும், அவரைச் சுற்றி நடித்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள்.ஆனால் அவர்களுடன் இணைந்து நடிக்கும் போது ருத்ரா தன் மீது கவனம் ஈர்க்கும் வகையில் தைரியமாக நடித்திருக்கிறார். நான் கூட என் முதல் படத்தில் இப்படி தைரியமாக நடிக்கவில்லை.அதனால் அவர் சினிமாவில் நாயகனாக நிச்சயம் ஒரு இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இதில் ஒரு நடிகர் கதாபாத்திரம் இருக்கிறது.அதில் நடிக்க வெளியே போய் கேட்பதை விட நானே செய்துவிடலாம் என்று தோன்றியது.அதனால் நானே நடித்து விட்டேன்.படம் முழுவதும் வருகிறேன்.எனக்கு இது முதல் காதல் படம் என்பதால் எனக்கும் புது அனுபவமாக இருக்கும்.
ருத்ராவுக்கு ஒரு காதல் இருக்கும், எனக்கு ஒரு காதல் இருக்கும், ருத்ராவின் அம்மா – அப்பா கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு காதல் இருக்கும் இப்படி படம் முழுவதுமே காதல் மற்றும் பொழுதுபோக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும்.அதனால், இது முழுவதுமான ஒரு காதல் படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.











