விஷ்ணுவிஷால் படத்துக்கு மேலும் ஐந்துகோடி – விவரம்
முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கியிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது.2023 சனவரி 20 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம்.அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி மமிதாபைஜுவும் இருக்கும் முதல்பார்வை வெளியிடப்பட்டது.
இப்படத்துக்கு இசை: திபு நினன் தாமஸ்,ஒளிப்பதிவு: தினேஷ் கே.பாபு,படத்தொகுப்பு: சான் லோகேஷ்,கலை இயக்கம்: கோபி ஆனந்த்,
இவ்வாண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி, இப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.படத்தின் நாயகன் விஷ்ணுவிஷாலும் அதை உறுதி செய்திருந்தார்.
ஆனால்,இப்போதுவரை அந்தப்படம் வெளியாகவில்லை.
ஏன்?
படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே படம் தாமதமாகிறது எனச் சொன்னார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகமானது உட்பட பல காரணங்களால் மொத்தச் செலவு திட்டமிட்டதைவிடப் பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்றும் அதனால் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இன்னொருபக்கம் படத்தின் நாயகன் விஷ்ணுவிஷாலுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்பதால் அவர் படவேலைகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லப்பட்டது.அதன்பின் அவருக்கு இந்தப்படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையைக் கொடுத்து அதைச் சமாளித்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இப்படிப் பல காரணங்களால் தாமதமானது கூட ஒருவகையில் அந்தப்படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துவிட்டதென்கிறார்கள்.
அப்படி என்ன நடந்தது?
இந்தப்படம் தொடங்கிய நேரத்தில்,திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனத்துக்குக் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாகச் சொன்ன தொகை சுமார் பதினைந்து கோடி என்றும் சொல்லப்பட்டது.
ஆனால்,படம் தாமதமாகிக் கொண்டே போனதால்,அமேசான் நிறுவனம் இந்தப்படத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது என்றார்கள்.இது படத்துக்குப் பின்னடைவு என்றும் சொன்னார்கள்.
இப்போது அதுவே பலமாகியிருக்கிறதாம்.
அமேசான் ஒப்பந்தத்தை முறித்ததும்,நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தை அணுகினார்களாம்.அந்நிறுவனம்,இப்படத்தை வாங்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம்.
இதற்காக அந்நிறுவனம் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் தொகை சுமார் இருபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.படம் தாமதமானதால் கூடுதலாக ஐந்துகோடி கிடைத்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.











