டோண்ட் டிரபிள் தி டிரபிள் – திரைப்பட விமர்சனம்
பணத்துக்காகப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைக் கடத்தத் துணியும் நாயகன் பகத்பாசில்,சிறுமி சாராவைக் கடத்துகிறார்.அந்தச் சிறுமியோ தன் பெற்றோரைத் தேடுவதாகக் கூற அவருடன் பயணிக்கிறார் பகத்பாசில்.அந்தப் பயணத்தில் ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது. அதுஎன்ன? அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் டோண்ட் டிரபிள் தி டிரபிள்.
நாயகனாக நடித்திருக்கும் பகத்பாசில்,எந்த வேடம் கொடுத்தாலும் திறம்படச் செய்யும் வல்லமை உடையவர் என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.அவருடைய அறிமுகக் கட்டம்,சாராவை சந்தித்தபின் அவருக்குள் நடக்கும் மாற்றங்கள் ஆகியனவற்றை சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
சிறுமி சாராவின் வேடமும் அதில் நடிப்பும் அழகு.அவருக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் குழந்தைகள் உலகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன.அனுபவமிக்க பகத்பாசிலுக்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதை எதிர்கொண்டு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அஸ்லம்பாய் ஆக நடித்திருக்கும் மகேஷ் மஞ்ச்ரேகர், பிரதாப் கதாபாத்திரத்தில் வரும் செளரப் சச்தேவா, மல்லேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜாக நடித்திருக்கும் கிருஷ்ணா,சிறுமி சாராவின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா பிள்ளை, சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோர் தங்கள் வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் பிராட் பிரான்சிஸுக்கு படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமின்றி அதற்குப்பிறகும் நிறைய வேலைகள்.கணினி வரைகலை வேலைகள்.இரண்டையும் கலந்து எது நிஜம்? எது வரைகலை? என்று யோசிக்குமளவுக்குக் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.குறிப்பாக சாரா இடம்பெறும் காட்சிகள் உற்சாகமூட்டுகின்றன.
காலபைரவா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.பின்னணி இசை கதைக்களத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி,படம் கலகலப்பாகச் செல்ல வைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க ஒரு கற்பனையான உலகத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி.குழந்தைகள் உலவும் அந்த உலகத்தில் குதூகலமாகப் பயணிக்க வைத்திருக்கிறார்.சிறுமி சாரா கதாபாத்திர வடிவமைப்பு மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது.அதற்கேற்ப காட்சிகளையும் வைத்து முற்றிலும் மாறுபட்ட மன உணர்வையும் காட்சி அனுபவத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
தான் உருவாக்கிய கற்பனை உலகில் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி இரசிகர்களும் சிரிப்பும் குதூகலமுமாகப் பயணிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர்.அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது.
– இளையவன்











