சினிமா செய்திகள்

2 தயாரிப்பாளர்கள் நிராகரித்த இயக்குநருக்கு ஆதரவு கொடுக்கும் விஷால்

விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.

இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது என்றும் சொன்னார்கள்.

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் ஆகும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து கே.பி.ஃபிலிம்ஸ் பாலு விலகிக் கொண்டாராம்.

அதன்பின் தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினாராம். அவரும் படத்தின் பட்ஜெட்டைக் காரணம் சொல்லி விலகிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் திகைத்து நின்ற இயக்குநர் ஆனந்த் ஷங்கருக்கு விஷாலே கை கொடுத்திருக்கிறாராம்.

இந்தக்கதை மிகவும் நன்றாக இருக்கிறது, இதை விட்டுவிட மனமில்லை, எனவே எங்கள் நிறுவனத்திலேயே இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில் இப்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்கள் இருக்கின்றன.இவற்றை முடித்துவிட்டு ஆனந்த்ஷங்கரின் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் விஷால்.

Related Posts