சினிமா செய்திகள்

தமிழில் படமே இல்லை – விஜய்சேதுபதியின் அதிரடி முடிவு

விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன.

அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை என்பது அவருக்குப் பெரும் குறையாக இருக்கிறதாம். 

இந்தக் குறையைப் போக்க அதிரடியாக ஐந்து படங்களில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது அஜீத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், ஆறுமுககுமார் இயக்கத்தில் ஒரு படம், காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம், குரங்குபொம்மை நித்திலன் இயக்கத்தில் ஒரு படம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஒரு படம் என ஐந்து படங்களில் நடிக்க அவர் ஒப்புதல் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

அவை இறுதியான பிறகு, அடுத்தடுத்து இப்படங்கள் குறித்த அறிவிப்பும் படப்பிடிப்பு குறித்த விவரங்களும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 

2023 ஆம் ஆண்டு இப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

Related Posts