சினிமா செய்திகள்

தங்கலான் படம் குறித்த திடீர் சர்ச்சை

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தங்கலான். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல், ம்துரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படம் 2024 பொங்கல் திருநாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே 2024 பொங்கலுக்கு ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள லால்சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சியின் அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் லால்சலாம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் நான்காவதாக இந்தப்படமும் வெளியானால் திரையரங்குகளைப் பகிர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

இதனால் தங்கலான் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு வெளியாகாமல் இருக்கிறதென்கிறார்கள்.

அதோடு இன்னொரு இரகசியத் தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது.

அது என்னவெனில்?

தங்கலான் படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்கள்.அதற்கு நல்ல விலையும் கிடைத்திருக்கிறது.

இப்போது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்யும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பெறுவதற்காக அப்படத்தைப் பார்த்த பெரிய தொலைக்காட்சி நிறுவனமொன்று படத்தை நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திரையுலக வட்டாரத்தில் உலாவரும் இந்த சர்ச்சைத் தகவல் முற்றிலும் சரியா? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.

அப்படியிருக்க இது எப்படி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறதென்றால்? பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் மற்ற படக்குழுவினர் இந்தச் செய்தியைப் பரப்பி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் நெருப்பில்லாமல் புகையாது என்றும் சொல்கிறார்கள்.

இரண்டில் எது சரி? என்பதைப் பொறுத்திருந்துதான் அறியவேண்டும்.

Related Posts