February 12, 2025
சினிமா செய்திகள்

லியோ திரையிடல் – தமிழ்நாடு அரசின் 2 ஆவது அரசாணை

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு விண்ணப்பித்திருந்ததை ஒட்டி அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான அரசாணையில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் எனவும் அக்டோபர் 19 அன்று மட்டும் அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டும் எனவும், இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை விதிமீறல் இல்லாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் அறிவிப்பை வெளியிட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு வேறோர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts