சினிமா செய்திகள்

மாநாடு இருக்கட்டும் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் – விஜய் உத்தரவு

விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார்.

முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில், இது அவரது கடைசிப் படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வடிவமைப்பில், நீல வண்ணத்தின் பின்னணியில்,ஒரு கை தீப்பந்தம் ஏந்தியிருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அதில், “ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் படம் அரசியல் தன்மை கொண்ட படமாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன.படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.இருப்பினும் படத்தில் பூஜாஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தி நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கவுள்ளது.அக்டோபர் 4 ஆம் தேதி இப்படத்தின் தொடக்கவிழா நடைபெறும் எனவும் அடுத்தநாள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நடக்கும் என்றும் தொடக்கத்தில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். அதற்காகப் பெரிய அரங்கம் அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் திட்டமிடல் எல்லாம் விஜய் கட்சியின் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கும் என்பதை ஒட்டி திட்டமிடப்பட்டது என்றும் அதன்பின் அவருடைய கட்சி மாநாடு அக்டோபர் 27 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்பிலும் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கட்சி மாநாட்டை விட படம் தொடங்குவது முக்கியம் எனவே திட்டமிட்டபடி அக்டோபர் ஐந்தாம் தேதியே படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று விஜய் கூறிவிட்டாராம்.அதனால் படக்குழு உற்சாகமாக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதாம்.

இவ்வாண்டு அக்டோபரில் தொடங்கவிருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts