வீரதீரசூரன் விவகாரம் – உதயநிதியிடம் முறையீடு

சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீரதீர சூரன் பாகம் 2 ‘
இப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
மார்ச் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப்படத்தினை இரசிகர்களிடம் சென்றடையச் செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஐதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.
இப்படத்துக்கு தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இப்படம் வெளியாகும் அதேநாளீல் மோகன்லால் நடிக்கும் படமொன்றும் வெளியாகவிருக்கிறது.அதனால் கேரளா திரையரங்குக்காரர்கள் அந்தப்படத்தைத் திரையிட முன்னுரிமை கொடுக்கிறார்களாம்.அங்குள்ள சுமார் அறுநூற்றைம்பது திரைகளில் சுமார் ஐநூறு திரைகளை மோகன்லால் படம் பிடித்துக் கொண்டதாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் கேராளவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் அது நேரடி மலையாளப் படம் என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் வீரதீரசூரன் நேரடியாகத் தமிழில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படிச் செய்கிறோம் என்று சொல்கிறார்களாம்.
கேரளாவில் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டிலும் வீரதீரசூரன் படத்துக்கு மோகன்லால் படத்தால் சிக்கல் என்பது தான் நகைமுரண்.
இங்கு என்ன சிக்கல்?
இங்கு மோகன்லால் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.அதனால் திரையரங்குக்காரர்கள் அப்படத்தைத் திரையிட முன்னுரிமை கொடுக்கிறார்களாம். ஏனெனில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் கமல்,ரஜினி,தனுஷ் ஆகியோர் படங்களை அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறது.அதனால் இப்போது வீரதீரசூரன் படத்தைத் திரையிட்டுவிட்டால் அந்தப்படங்கள் உங்களுக்குக் கிடைக்காது என்று ரெட்ஜெயண்ட் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதனால் சுமார் எழுநூறு திரையரங்குகள் வரை வீரதீரசூரன் படத்தைத் திரையிடத் தயாராக இருந்தன என்றும் இப்போது அதிலிருந்து இருநூறு முதல் இருநூற்றைம்பது திரையரங்குகள் வரை குறையும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு தமிழ்ப்படத்துக்கு கேரளாவில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதைக் கூட ஒப்புக்கொள்ளலாம் ஆனால் தமிழ்ப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் அதேநிலை என்றால் எப்படி? என எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் வீரதீரசூரன் விநியோகஸ்தர்கள் கொந்தளிப்பில் உள்ளதாகவும் இது தொடர்பாக துணைமுதலமைச்சர் உதயநிதியிடம் முறையிடவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.