இந்தப்படம் ஜெயிக்கும் – கார்த்தி உறுதி
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி.ஆர்.கே.கிரண் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல்அரசு சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தைப் தயாரித்திருக்கிறார்.
இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி,டிசம்பர் 8 அன்று படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகை ஷில்பா பேசியதாவது..,
வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம். சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார்.அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன். கார்த்தி உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரை விட்டால் வேறு யாரும் இந்த ரோல் செய்ய முடியாது. அந்தளவு அசத்தியிருக்கிறார். கீர்த்தியை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். இந்த ப்ராஜெக்ட் அழகாக எடுத்துள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல் அரசு பேசியதாவது..,
இது எனக்கு ஸ்பெஷலான படம். என் அப்பா எம் ஜி ஆர் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் அவருடன் வேலை பார்க்க முடியாது, ஆனால் அது இந்தப்படத்தில் நிறைவேறியுள்ளது. படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளது, அதைச் சொல்ல முடியாது. நான் நிறைய தயாராகி வந்தால், கார்த்தி சார் அவர் அப்பாவிடம் நிறையக் கேட்டுவிட்டு வருவார். அவர் கடினமாக உழைத்துள்ளார்.இந்தப்படத்தில் வேலை பார்த்தது பெரும் மகிழ்ச்சி.ஞானவேல் ராஜா நிறைய உழைத்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன் நன்றி என்றார்.
ஜி எம் சுந்தர் பேசியதாவது..
இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத்தான் தெரியும்.இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார்,அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார்.அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலை கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ்,அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார்.ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் “காதலும் கடந்து போகும்” படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார்.அவருக்கு நன்றி. சத்யராஜ் சார் என்னை பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்தார் அதற்காக அவருக்கு நன்றி. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி என்றார்.
பல்லவி சிங் பேசியதாவது..,
வா வாத்தியார் படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம்.நலன் சாரிடம் வேலை பார்த்தது எப்படி இருந்தது என அனைவரும் கேட்டனர்.அவர் என்னிடம் முழு சுதந்திரமாகப் புதிதாக செய்யச் சொன்னார். முழுதாக புதுமையாகச் செய்ய வாய்ப்பு தந்தார். நலனின் விஷனுக்கு உருவம் தந்துள்ளோம் இது ஒரு கூட்டு முயற்சி.அனைவரும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்,சிவக்குமார் எனக்கு அண்ணன் மாதிரிதான், கார்த்தி சார் இந்தக்கதையை ஒத்துக்கொண்டதற்கு அவர்தான் காரணமாக இருப்பார். ஏனென்றால் எம் ஜி ஆருடன் அதிகம் பழகியது அவர்தான்.அதற்காக அவருக்கு நன்றி.நலனிடம் இந்தப்படத்தைத் தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்யுங்கள் என்றேன்,அதை இந்த தேர்தலில் செய்துள்ளார். எனக்கு ஸ்பெஷல் கேரக்டர்,அதைப்பற்றிச் சொல்லமாட்டேன், ஆனால் அவர் சொன்ன அளவுக்குச் செய்துள்ளேன் என நம்புகிறேன்.சத்யராஜ் சார் எம் ஜி ஆர் தந்த கர்லாக்கட்டையைத் தந்து படத்தில் இதை பயன்படுத்தி நடித்துவிட்டுத் திரும்ப கொடுத்திவிடனும் என்றார். அதைத் தூக்கவே முடியவில்லை.எம் ஜி ஆரின் தீரம் அப்போதுதான் புரிந்தது.கார்த்தி அருமையான நடிகர், அவருடன்தான் எனக்கு நிறையக் காட்சிகள்,அவர் எனக்கு அண்ணன் குழந்தை போலத்தான்,சூர்யா, ஜோதிகா எல்லோரும் அப்படித்தான்.உங்களுக்குப் பிடித்த மாதிரி நலன் இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ்சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,
இங்கே நிறையப் புரட்சித் தலைவர் இரசிகர்கள் வந்திருப்பீர்கள்.எங்க வீட்டுப் பிள்ளை கார்த்தி இப்படத்தில் எம் ஜி ஆராக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. நான் தீவிர வாத்தியார் இரசிகர் ஆனால் நான் வில்லன் ஆனால் ஆனந்த்ராஜ் இரசிகராக நடித்துள்ளார்.ஆனால் எம் ஜி ஆர் டயலாக் எல்லாம் சொன்னால் அவரால் என்ன படம் என சொல்ல முடியாது.நான் எம் ஜி ஆரின் அரக்கத்தனமான இரசிகன். எப்போதும் ஒரே புரட்சித் தலைவர் தான்.அவர் ரோலில் எங்க வீட்டுப்பிள்ளை கார்த்தி நடித்தது மகிழ்ச்சி.வேறு யாரவது நடித்திருந்தால் வயிறு புகைச்சலாகியிருக்கும்.ஆனால் கார்த்தி நடித்தது மகிழ்ச்சி.இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது..,
என்னுடைய திரைப்பயணத்தில் மிக முக்கியமான அழகான தருணம் நலன்,ஶ்ரீனிவாஸ் கவினை சந்தித்தது தான்.அவர் படம் வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தப்படம் அறிவித்தபோது போன் செய்து, கெஞ்சி,நான் செய்கிறேன் என வாய்ப்பு வாங்கினேன். நிஜ வாழ்வு சூப்பர்ஹீரோ என எம் ஜி ஆரை சொல்லாம். அவர் வாழ்க்கையை அவர் ஆளுமையைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.நிறைய உழைத்து இசையைத் தந்துள்ளோம்.சத்யராஜ் சார் படத்தில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது.இந்தக்கதை கேட்ட போது, கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புது திறப்பாக இருக்குமெனத் தோன்றியது.இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்.இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ரஞ்சித், நலன்,கார்த்திக் சுப்புராஜ், என இவர்கள் எல்லாம் சினிமாவுக்குள் வரக்காரணமாக இருந்த ஞானவேல் சாருக்கு நன்றி.இந்தப்படம் பிடித்திருந்தால் எல்லோரிடமும் சொல்லுங்கள் நன்றி என்றார்.
திங்க் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,
வா வாத்தியார் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.படத்தின் ஆரம்பத்திலேயே இப்படத்தில் இணைந்து விட்டோம்,பாடல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.நலனின் சூது கவ்வும் படத்தில் இணைந்திருந்தோம்,அது பிளாக்பஸ்டர் ஆல்பம்.அது போல இந்தப்படப் பாடல்களும் வெற்றி பெறும். இப்படம் கொஞ்சம் பார்த்தேன்,படம் அருமையாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சக்தி வேலன் பேசியதாவது..,
திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள் ஆனால் எனக்கு அது கார்த்தி சார்தான்.என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில்,கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன் எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார். கார்த்தி சார் அவர் படங்களில் சின்னச்சின்ன விசயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார். அவர் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும்போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார் எனத் தெரியும். ஞானவேலின் அப்பா தீவிர எம் ஜி ஆரின் இரசிகர். அவர் எடுத்திருக்கும் படம்.அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது.சூர்யா சார் கூப்பிட்டு இதைச் செய்து,உன் பிரச்சனையை தீர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார்.வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை.வா வாத்தியார் படம் மூலம் ஞானவேல் சாருக்கு எல்லாம் மாறும்.நலன் இரண்டு படம் செய்துள்ளார்.இரண்டுமே கல்ட் படம். வா வாத்தியார் ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள்.வா வாத்தியார் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்குமென நம்புகிறேன் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர்.ரவிகுமார் பேசியதாவது..,
நலன் சார் இயக்குநர் குழுவிலிருந்தவன் நான், சூது கவ்வும் படத்தில் வேலை பார்த்தேன்.அவரிடம் இருந்து தன்மையாக எப்படி நடந்து கொள்வது எனக் கற்றுக்கொண்டேன்.வா வாத்தியார் படம் நான் பார்த்து விட்டேன்,நலன் சாரிடம் கார்த்தி சார்,எம் ஜி ஆர் மாதிரியே தெரிகிறார் எனச் சொன்னேன்.எம் ஜி ஆருக்கு வாழ்க்கை வரலாற்று படமெடுத்தால் அதற்குப் பொருத்தமானவர் கார்த்தி சார்தான்.மிக அற்புதமான படமாக வந்துள்ளது.நலன் சாருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம்.இந்தப்படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்த படம்.சில படங்கள் ஈஸியாக கதை சொல்லிவிடலாம் ஆனால் இது கதை சொல்லவே கஷ்டப்பட வேண்டும்.நலன் அதை அழகாக எடுத்துள்ளார்.அவர் முதல் இரண்டு படங்களில் விநியோகத்தில் இணைந்திருந்தோம்.இப்போது மூன்றாவது படத்தைத் தயாரித்திருக்கிறோம்.கார்த்தி சார் மெய்யழகன் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம் எனப் பலர் சொன்னார்கள் ஆனால் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார்.அதேபோல் இந்தப்படத்திலும் அட்டகாசமாகச் செய்துள்ளார்.எல்லோருமே மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர்.கார்த்தி இரசிகர்களுக்கும் அவர்கள் இரசிக்கும் படமாக இருக்கும்.வாத்தியார் ஆசி இப்படத்திற்கு உள்ளது, அவரது ஆசியில் இப்படம் வெற்றிப்படமாக அமையுமென நம்புகிறேன் நன்றி என்றார்.
நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம்.தமிழில் பேச முயற்சிக்கிறேன். இந்தப்படத்தில் தமிழ் மக்களுக்கு அறிமுகமாவது மகிழ்ச்சி.நலன் சாருக்கும்,ஞானவேல் சாருக்கும் நன்றி. இந்தப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போது டபுள் ஷிப்ட்டில் நடித்துக்கொண்டிருந்தேன்,ஒருநாள் செட்டில் தூங்கி விட்டேன் ஆனால் எனக்காகச் சத்தம் போடாமல் லைட் செய்தார்கள் அதற்காக அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. நலன் சார் உடன் வேலை பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சி அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும்போது சின்னச்சின்ன விசயங்களையும் கவனித்துப் பாராட்டினார்.சத்யராஜ் சார் இரசிகை நான் ஆனால் அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை. அது வருத்தம்தான்.என் குடும்பத்தில் பலர் சிவக்குமார் சார் இரசிகர்கள்தான்.எனக்குத் தமிழ் இரசிகர்கள் தரும் அன்பு பெரிய மகிழ்ச்சி தருகிறது.கார்த்தி சார் மிகப்பெரிய இரசிகை நான்,அவரை ஷீட்டிங்கில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தேன்.அவருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறியது மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது..,
9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன்.ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும்.இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்தபோது,எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார்,சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார்.இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள்,அது வெறும் கிண்டல்தான் என்றேன்,இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம்.தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன்.அதுதான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி.ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி.கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார்.அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார்.எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்புதான் இந்தப்படம்.அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
நடிகர் கார்த்தி பேசியதாவது..,
நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்துவிட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப்படம் செய்துள்ளார். நலனுக்கு நிறைய இயக்குநர்களே இரசிகர்களாக இருக்கிறார்கள்.எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள்.அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார்.இது எப்படி நம்மால் செய்யமுடியும் என பயமாக இருந்தது.எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்துவிட வேண்டும் என ஒத்துக்கொண்டேன். நலன் 70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார்.இந்தப்படத்திற்குள் போன பிறகுதான்,எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது.அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர்.அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் இரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர்.எப்படி இப்படி ஒரு மனிதர் இருந்தார் என வியக்க வைத்தவர்.“இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என பாடி வைத்துவிட்டு போய்விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள்.இன்றும் அவர் பற்றி பேசுகிறோம். அவர் இரசிகர்கள் அன்புடன்,அவர் இரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே இரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன்.நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார்.90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும்.மலையாளம் போல நம் தமிழ்சினிமாவில் இல்லையே எனத் தோணும்.நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும்.அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும்.ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள்.சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக மொட்டை பாஸாக நடித்துள்ளார்.ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார்.கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார்.சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார்.எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம்.நம் தமிழ்சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும்.ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய இலாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும்.புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்.அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











