வெளியிடுமுன்பே வெற்றி – தோழர் வெங்கடேசன் படக்குழு மகிழ்ச்சி
அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன்.
எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன்.
இத்திரைப்படம் அரசுப் போக்குவரத்துத் துறையில் இருக்கும் அவலங்களைச் சுட்டிக் காட்டி அதிர்வை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படக் குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை பல கோணங்களில் ட்ரான் தொழில்நுட்பத்துடன் காட்சிப் படுத்தியுள்ளனர்.
திருப்புமுனை கிராபிக்ஸ் காட்சியை மோஷன் கண்ட்ரோல் காமிரா உதவியுடன் படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குநர் மகாசிவன்.
நல்ல படங்களை எடுக்கும் இயக்குநர் சுசீந்திரன், இப்படத்தின் உள்ளடக்கம் மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்தை வெளியிட முன்வந்திருக்கிறார். இதனால் வெளியிடுமுன்பே வெற்றி பெற்றுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.











