December 6, 2024
சினிமா செய்திகள்

தி லெஜண்ட் சரவணன் கேட்ட கேள்வி ஆடிப்போன மதுரை அன்பு

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது ‘தி லெஜன்ட்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.’தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். 

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்கிறார், கலை அமைப்புப் பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடனப் பணிகளை மேற்கொள்கிறார்கள், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். 

பாசம்,சண்டை, காதல்,நகைச்சுவை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட்.

ஓர் அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இரசித்துப் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.
 
சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களைத் தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.
 
இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இப்படத்தைத் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை மதுரை அன்பு பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்பட வெளியீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, இப்படத்தை முன்னூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டு சிறப்பாகச் செய்துவிடலாம் என்று மதுரை அன்பு சொல்லியிருக்கிறார். அப்போது, தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு திரையரங்குகள்? என்று கேட்டிருக்கிறார். அதர்கு, சுமார் 1100 திரையரங்குகள் உள்ளன என்று மதுரை அன்பு சொன்னராம்.உடனே, அவ்வளவு திரையரங்குகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார் சரவணன்.

இதைக்கேட்டு ஆடிப்போன மதுரைஅன்பு, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்று சொன்னதோடு படவெளியீட்டு முறைகளைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவற்றை ஏற்றுக்கொண்டாராம் சரவணன். இதனால் முன்னூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts