November 2, 2024
சினிமா செய்திகள்

தி கோட் தமிழ்நாடு வியாபாரம் – விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம், தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

செப்டெம்பர் 05 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையின் விற்ப்னை நடந்து முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருக்கிறார்.

எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருக்கிறதாம்.அதன்படி இந்த உரிமைக்காக ராகுல் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் தொகை சுமார் எழுபது கோடி என்கிறார்கள். இதற்கான முன் தொகையாக சுமார் பத்துகோடி கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

விஜய்யின் முந்தைய படமான லியோவை விட சுமார் முப்பது விழுக்காடு குறைவாகவே இப்படத்தின் வியாபாரம் நடந்திருக்கிறது.ஏற்கெனவே முடிந்த வெளிநாட்டு உரிமை, இணைய ஒளிபரப்பு உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன அப்படித்தான் இருந்தது.

இப்போது தமிழ்நாடு வியாபாரமும் அதேபோல் அமைந்துவிட்டது என்கிறார்கள். லியோவை தமிழ்நாடு முழுக்க விநியோக அடிப்படையில் வெளியிட்டாலும் முன் தொகையாக சுமார் நூற்றியைந்து கோடி பெற்றார்கள் என்று சொல்லப்பட்டது. இப்போது இந்தப்படத்துக்கு எழுபது கோடி விலை என்றாகியிருக்கிறது.

இன்னொருபுறம், ரோமியோ பில்சர்ஸ் ராகுல், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.அதன்பின் போனிகபூர் தயாரித்த அஜீத்தின் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுடன் இணைந்திருந்தவர், உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தைத் தயாரித்தவர்.

இவர் விஜய் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் ஆகியிருக்கிறார். இதன் பின்னணியில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இருக்குமோ? என்கிற ஐயம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.இது விஜய்க்குத் தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்கிற விவாதமும் தொடங்கியிருக்கிறது.

Related Posts